தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.
அண்மையில் கூட்டு எதிரணிக்கும், சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான இணைப்பாளராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை நியமிப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமை தாங்கியிருந்தார்.
அந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வு அறிக்கை முன்னேற்றகரமான ஒன்றாக வரவேற்கப்பட்ட போதும், மகிந்த ராஜபக்ச அதனை நடைமுறைப்படுத்த இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, தமிழ் மக்களினதும், தமிழ்க்கட்சிகளினதும் ஆதரவைத் திரட்டுவதற்காக, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை இணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.
எதிர்கால அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் திஸ்ஸ விதாரண கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதற்கமைய, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் அவர் நேற்று முன்தினம் தொடக்கம் நடத்தி வரும் கலந்துரையாடல்கள் இன்று வரை தொடரவுள்ளது.
ஏற்கனவே அவர், சி.வி.விக்னேஸ்வரன், ஆனந்தசங்கரி, சந்திரகுமார், பிரபா கணேசன், வரதராஜப்பெருமாள், உள்ளிட்டவர்களைச் சந்தித்துள்ளார். இன்று பல அமைப்புகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் கிழக்கிலும் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என தெரியவருகிறது.
கருத்து தெரிவிக்க