உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித்தை பிரதமராக நியமிக்கும் மைத்திரியின் திட்டம் தோல்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட புதிய முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இழுபறிகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நியமிக்கக் கோரி, ஐதேகவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றை கையளித்திருந்தனர்.

இந்த ஆவணத்தின் அடிப்படையில், ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமித்து, புதிய அமைச்சரவையை அமைக்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

எனினும், இந்த முயற்சிகளுக்கு சஜித் பிரேமதாச ஒத்துழைக்க மறுத்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டால், கட்சியின் ஆதரவாளர்கள் தன்னைக் காட்டித் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டுவார்கள் எனவும் அதனால் தன் மீது வெறுப்படைவார்கள் என்றும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதியேற்றால் அது அரசியல் சதித் திட்டமாகவே அழைக்கப்படும் என்ற அச்சத்தினால், அதற்கு ஒத்துழைக்க அவர் மறுத்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற சதித்திட்டம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் நடந்து வருவதாக, கடந்தவாரம் அலரி மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐதேகவின் உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க