யார் எவ்வாறு திட்டங்களை முன்னெடுத்தாலும் அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாண்டு செப்டெம்பர் 02 முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியமென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கரந்தெனியவில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சலுகைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனவரி 8 ஆம் திகதி வரை பதவியில் இருக்க முடியும். வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் எவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் உடனடியாக நிறைவேற்று தலைவராக பதவியேற்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினத்தை செப்டெம்பர் 2 திகதிக்கு பின் அறிவிக்க முடியும். அதேபோல் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதியன்றி வேறு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தின் சில வாரங்களை இழக்க நேரிடும். இந்த நிலைப்பாடுகள் அரசியலமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க