இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்கும் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இலங்கை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தனது பிராந்திய அலுவலகம் ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளது.
இது இவ்வாண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட மூன்றாவது பிராந்திய அலுவலகமாகும். இதைத் தவிர மன்னாரிலும் மாத்தறையிலும் இரு பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பிராந்திய அலுவலகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்களின் அதிக ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தனது செய்திக் குறிப்பி; தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்ந்தும் தனது பிராந்திய அலுவலகங்களை நிறுவி செயற்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்கும்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நிறுவுவது என்பது இலங்கையில் நான்கு தசாப்தகாலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நோக்கமாகும். மேலும் இது நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புகூறலுக்கான அரசாங்கத்தின் வெளிப்படையான அங்கீகாரமாகும்.
அலுவலகத்தின் புதிய கிளையானது இல.124, ஆடியபாதம் வீதியில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க