அட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின.
இத்தீவிபத்து காரணமாக அம் மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து 20 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. தோட்ட நிர்வாகமும், இராணுவமும் இணைந்து இவர்களுக்கு போடைஸ் விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து கொடுத்தன.
குறித்த கொட்டிலகள், அமைத்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதில் இழுபறி நிலவுவதாக அங்கு வாழும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகம் இவர்களுக்குரிய காணிகளை சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாகவும் இதனால் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கும் நகரங்களுக்கு செல்வதென்றாலும், வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கு பொருத்தமான இடங்கள் இருக்கின்ற போதிலும் பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி தோட்ட நிர்வாகம் தட்டிக்கழிப்பதாகவும், இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் மௌனம் காத்துவருவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது அமைத்து கொடுக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்கு மழை நேரங்களில் வீட்டினுள் தண்ணீர் கசிவதனால் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒரு சிலரின் வீடுகளின் மூங்கில்கள் இத்துப்போய் கொட்டில்களும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மூங்கில்களிலிருந்து தூசிகள் கொட்டுவதாகவும் அவற்றிருந்து வண்டுகள் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த கொட்டில்களில் கடும் குளிர் காரணமாக பலர் கை குழந்தைகள் சிறுவர்களை வைத்து கொண்டு சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 20 குடும்ங்களைச் சேர்ந்த 108 பேரில் பாடசாலை மாணவர்கள் 25 பேர் அடங்குவதாகவும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு இருவரும்,க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு ஒரு இந்த கொட்டில்களிலிருந்தே தங்களது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது இடர்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் வெகுசன தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமாரிடம் கேட்ட பொழுது,
போடைஸ் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கட்டாயமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்காக எமது அமைச்சு தோட்ட அதிகாரி மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இருந்த போதிலும் அத்தோட்டத்தில் மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தை அம்மக்கள் நிராகரித்துள்ளனர்.
அதேசமயத்தில் குறித்த ஒரு இடம் தோட்ட நிர்வாகம் வழங்கும் பொழுது அவ்விடம் வீடுகள் அமைப்பதற்கு உகந்ததா என தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் ஊடாக உறுதி செய்யுமாக இருப்பின் உடனடியாக அங்கு வீடுகளை அமைத்து கொடுப்பதில் எமக்கு தயக்கம் இல்லை.
ஆனால் அங்கு பாதிக்கப்பட்ட 108 பேர் வசிக்ககூடிய வீடுகளை அமைத்து கொடுக்க நிர்வாகம் கொடுத்த இடத்தினை நிராகரிக்கும் படியாக சில அரசியல் தலைமைகள் அம்மக்களை தூண்டி விடுகின்றனர்.
இதன் காரணமாகவே அங்கு நிலங்கள் கிடைக்காமல் வீடுகள் கட்டி முடிக்க முடியாமல் உள்ளது. ஆனால் எமது கட்சிக்கு வாருங்கள் வீடுகளை கட்டி தருகின்றோம் என்று சொல்வது உண்மைக்கு புறம்பான விடயமாகும். இதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது மாற்று கட்சியின் சதி திட்டமாகும்.
ஆகையால் முதலில் இடத்தை தெரிவு செய்ய அதற்கான நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு எவ்வேளையிலும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க