இந்தியாவில் நடைபெறும் ரி-20 ஐ.பி.எல். தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர் தோல்விகளைத் தொடர்ந்து அண்மையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ், நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர அடிப்படையில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அத்தோடு, உதவி பயிற்சியாளராக செயற்பட்டு வந்த அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும் பதவிலியிருந்து விலகினார்.
இந்த பின்னணியில் தற்போது பிரெண்டன் மெக்கலம், அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற பிரெண்டன் மெக்கலம், அண்மையில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப் பெற்றார்.
ஓய்வுப் பெற்றதற்கு பின்னர் தூதர், கிரிக்கெட் வர்ணனையாளர் பதவிகளை வகித்து வந்த மெக்கலம், தற்போது பயிற்சியாளர் துறையிலும் கால் பதித்துள்ளார்.
இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இறுதி லீக் போட்டியில் தோல்வியடைந்ததால், புள்ளிகள் பட்டியலில் 5ஆம் இடம் பிடித்து பிளே ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க