ஜோதிடம்

எதிரும் புதிரும்!-14

தமிழகத்திலிருந்து குணா

நமது தீய  கர்மாக்களை அழித்து நம்மை நல்வழி படுத்துவதே சனியின் பிரதான வேலை என்பதை  சென்ற முறை பார்த்தோம்! இப்போது 9ல் சனி வரும் பலனைப் பார்ப்போம்.

9- மிடம் என்றாலே தகப்பன் ஸ்தானம். உலக உயிர்களுக்கல்லாம் ஆதாரமான சூரியனே தந்தையாக பார்க்கப்படுகிறான்!
ஆகையால் ஒன்பதில் சூரியனின் தன்மை மேலோங்கி நிற்கிறது! அப்படி சூரியத்தன்மை கொண்ட இடத்தில் சனி நிற்பது சற்றே ஆபத்தான விஷயம்தான்.!
‘சூரியன், சனி என்றாலே எதிரும் புதிருமா? என்றால்… ஆம்! எதிரும் புதிருமே!

இவர் தந்தையென்றால் அவர் மகன். அவர் ஒளியென்றால் இவர் இருள். அவர் பகலென்றால் இவர் இரவு. அவர் நிஜமென்றால் இவர் நிழல் அவர்
பிறப்பென்றால் இவர் இறப்பு. அவர் ஆக்கம் என்றால் இவர் அழிவு.

இவர்களைப் பற்றி நமது பாரம்பரிய ஜோதிடத்தில் மட்டுமல்ல..’எண் கணிதம்’, ‘கை­ரேகை’ என்று அனைத்திலுமே எதிரும் புதிருமாக அமைந்திருக்கிறது! அவ்விதம் அமைந்திருப்பது, புராணங்களிலுள்ள இவர்களது கதைகளை மெய்ப்பிக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிக்காட்டுகிறது!

எண் கணிதத்தில் ‘1’ என்ற எண்ணே சூரியனின் எண்! 8 என்பது சனியை குறிக்கும் எண்! இவையிரண்டையும் கூட்டினால் 1+8= 9 வரும். 1 என்பது ஆக்கமென்றால் 8 என்பது அழிவு சக்தி! எல்லாம் ஒன்றிலிருந்து துவக்கி எட்டு வரைதான் ஒன்பதே இல்லை!
ஆனால் அந்த ஒன்பதில் தான் அனைத்தும் அடக்கம்! எப்படி?

1 லிருந்து 8 வரையிலான சக்திகள் ஒன்றிணைந்து உடலானாலும் உயிரின்றி வாழாதே! தாயின் கருவறையில் 1 ல் துவங்கி எட்டு மாதம் வரை எல்லா வளர்ச்சியுற்றாலும் 9ஆம் மாதத்தில்தான் அனைத்தும் முழுமை பெறுகிறது! ஆனால் ஒன்பதே இல்லையென்று நான் கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை! வலுவான காரணம் இருக்கிறது.

எண் கணிதத்தில் ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள். A,I,J,Q,Yக்கு-1, B,K,Rக்கு-2, C,G,L,Sக்கு-3, D,M,Tக்கு-4, E,H,N,Xக்கு-5, U,V,Wக்கு-6, O,Z க்கு-7 மற்றும் F,Pக்கு-8 என்றும் மதிப்பு கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒன்பதுக்கு இடமே இல்லை!
ஒன்பதுக்கு மதிப்பே கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒன்பது இல்லாமல் ஒன்றுமே இல்லை!

‘நவம்’ என்றால் வடமொழியில் ஒன்பது என்று அர்த்தம். நவசக்தி, நவதீர்த்தம், நவஅபிஷேகம், நவகிரகம், நவலோகம், நவஉலோகம், நவதானியம், நவராத்திரி, நவமணி, நவரசம், நவரத்தினம், நவநிதி, நவகுண்டம், நவபாஷாணம் மற்றும் நவதுவாரம்! அதாவது நம் உடலில் உள்ள ஒன்பது ஓட்டைகள்! இவை அனைத்துமே ஒன்பதில் ஒடுங்கி விடுகிறதே!

இதெல்லாம் நம் பாரம்பரியத்தில் ஒன்பது கொடுத்து வைத்த சிறப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டே எண் எண்கணிதத்திலும் 9ஆம் எண்ணை ‘இறைவனின் எண்’ என்றே அழைக்கிறார்கள் என்பதுதான் விந்தை.
இப்போது சொல்லுங்கள், எல்லாவற்றிலுமே வியாபிக்கும் இறைவனுக்கு தனியாக எந்த ஒரு மதிப்பை யார் உருவாக்கி கொடுத்துவிட முடியும்?

கணக்கில் 9ஐ மாய எண் என்று அழைக்கிறார்கள். காரணம் 9 உடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் அது தன் தன்மையினை இழப்பதில்லை. உதாரணமாய் 2+9 கூட்டினால் 11 வரும். அதிலுள்ள இரு ஒன்றையும் கூட்டினால் (1+1=2) இரண்டேதான் வரும்!

எப்பொருளாய் இருப்பினும் அப்பொருளின் தன்மையினை கெடுக்காது, அதில் நீக்கமற இறைவன் நிறைந்திருப்பான். அது கணக்கில் உள்ள எண்ணிலும்கூட! ஆக 1-ம் 8-ம் இணைந்ததே வாழ்வு! இரண்டு இணைந்ததே இறை தன்மை! பதினெண் சித்தர்கள் 18. 1 + 8யும் கூட்டினால் ஒன்பதே..! ஐயப்பன் கோயிலில் உள்ள படியும் பதினெட்டே! புராணங்களும் பதினெட்டே!
எல்லாவற்றிலும் ஒன்பது மறைபொருளாய் மறைந்திருக்கிறது.

எண் கணிதத்தில் மட்டுமல்ல கைரேகை சாஸ்திரத்திலும் அப்படிதான்! அதாவது குருவிரல், சனிவிரல் சூரிய விரல், புதன்விரல் என்று விரல்களையும் உள்ளங்கையில் சூரியமேடு, சந்திரமேடு, சனிமேடு, செவ்வாய் மேடு, சுக்கிரமேடு, புதன்மேடு, குரு மேடு, ராகுமேடு, கேது மேடு என்று மேடுகளையும் நவக்கிரகங்களுக்கே பங்கிட்டார்கள். ஆனால், கட்டை விரல் மட்டும்கடவுளின் விரலாகி விட்டது!

அந்த கட்டை விரல் இன்றி மற்ற நான்கும் இயங்குமா என்றால் அல்லை! உடலிருந்தாலும் உயிரிருந்தால்தானே மதிப்பு! அது போலதான் இதுவும்! நான்கு விரல்களும் கட்டை விரல் துணைக்கொண்டு என்ன வேலை செய்தாலும், ‘வெற்றி’ என்று வரும்போது ‘கட்டைவிரல்’ மட்டுமே உயர்த்தப்படுகிறது! இதை எதையுமே ஜோதிடர்கள் திட்டமிட்டு செய்தார்களா என்றால், இல்லை! எல்லாம் தன்னாலேயே நடத்திக் கொண்ட தன்னிகரற்ற இறையின் திரைக்கதை! அதனால் ஜோதிடம் ஒரு பரம்பரையின் உயிர்நாடியை ஒன்பதில் வைத்து புதைத்தது. அந்த 9க்கு சுபத்தன்மை உள்ள சனி வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு உதாரண ஜாதகத்தோடு பார்ப்போம்.

இந்த ஜாதகம் அரசாங்க வங்கியில் உயரிய பதவி வகித்த ஒரு அதிகாரியுடையது! இவர் ஜாதகத்தில் சனி சுபத்தன்மையோடு
குருவோடு இணைந்து நிற்பதால் நல்ல பரம்பரையில் பிறந்தார். தந்தை ஒரு பிரசித்தமான வருமானமுள்ள விவசாயி.
இருப்பினும் அவரது பரம்பரையில் யாரும் பெரிதாக படித்ததில்லை!
ஆனால் இந்த ஜாதகரோ அந்த பழியை தன் உயர்ந்த படிப்பால் துடைத்தார். தந்தைக்கு மேலாக பலரும் போற்ற புகழ்பெற்று
பரம்பரையை தழைக்கச்செய்தார்! 9-ல் நல்ல கதியில் சனியிருந்தால் நடக்கும் நன்மைக்கு தடையேது.

இப்போது இன்னொரு ஜாதகம் பார்ப்போம். சனி 9-ல் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
ஒழுக்கமற்ற தந்தைக்கு பிறந்த ஜாதகர் இவர். தந்தையால் இவர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். தந்தையை விட்டு
பிரிந்த பின்பும் கூட சரியான தொழிலும், வேலை வாய்ப்பும் இன்றி அவதிப்பட்டார்.

தாமதமாய் திருமணம் நடந்தேறினாலும் புத்திர பாக்கியம் கிட்டாமல் போனது! எல்லாம்  9பதிலுள்ள நீச்ச கதியில் உள்ள சனியின் தாக்கம் என்றால் அது மிகையாகாது. பொதுவில் ஒன்பதாமிட அதிபதி வலு பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாவிடில் 9இல் உள்ள நீச்சச்சனி அந்த பரம்பரையையே இல்லாமல் அடித்து, ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடும்! நாம் செய்யும் தொழிலின் சிறப்பு, அதில் வரும் இலாபத்தால் அடையாளப் படுத்தப் படுகிறது! அப்படி தொழிலைகுறிக்கும் கர்ம ஸ்தானத்துக்கும் இலாப ஸ்தானத்துக்கும் சனிபகவான் வந்தால் எப்படியென்பதை அடுத்த இதழில் பார்ப்போம்

கருத்து தெரிவிக்க