உள்நாட்டு செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில் வழங்கியது

கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷென் சியூ யுவான் 24 இலங்கை மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கிவைத்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.

சீனப் புலமைப்பரிசிலைப் பெற்றிருக்கும் இந்த மாணவர்களில் 10 பேர் இளமாணிப் பட்டப்படிப்பிற்கும், 14 பேர் வைத்தியத்துறை, கட்டடக்கலை, மொழிபெயர்ப்பு, இலத்திரனியல் வர்த்தகம், உளவியல், உணவு விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளில் கலாநிதி பட்டப்படிப்பிற்கும் தெரிவாகியிருக்கின்றார்கள்.

இவர்கள் செப்டெம்பர் மாதம் சீனாவிற்குத் தங்களது உயர்கல்வியைத் தொடர்வதற்காகச் செல்லவுள்ளதாகச் சீனத்தூதரகம் அறிவித்தது.

இந்த மாணவர்கள் கல்வி பயிலும் வருடங்கள் முழுவதும் கல்வி, தங்குமிட வசதி, வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு, மருத்துவக் காப்புறுதி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக 25 இலட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்திரவும், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பெரியசாமிப்பிள்ளை செல்வராஜும், புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் குடும்பத்தவரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க