விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கட் சபையின் வருவாயை குறைக்க ஐ.சி.சி திட்டம்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வரி விலக்கு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் சபைக்கு வழங்கும் வருவாயை குறைக்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் எந்த நாட்டில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறதோ அந்த தேசத்திடம் இருந்து முழுமையான வரிவிலக்கு கோருவது வழக்கம். எனினும் 2016-ம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்த போது ஐ.சி.சி.க்கு வரி விலக்கு கொடுக்கப்படவில்லை.

அதாவது 2016-ம் ஆண்டு உலக கிண்ண தொடர் ஐ.சி.சி. ஊடக ஒப்பந்தத்தின்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐ.சி.சி.க்கு செலுத்த வேண்டிய தொகையில் 10 சதவீதத்தை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இது குறித்து சமீபத்தில் விவாதித்த ஐ.சி.சி, 2016-ம் ஆண்டு உலக கிண்ண போட்டியின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் நோக்கில் இந்திய கிரிக்கெட் சபையிடம் (பி.சி.சி.ஐ) வருவாயை குறைக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஆண்டு வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. 2016-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.2,860 கோடி வழங்க வேண்டும். அந்த மொத்த தொகையில் 10 சதவீதத்தை, அதாவது ரூ.286 கோடியை குறைக்க ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க