4,286 தேசிய கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
நியமனம் வழங்குவதற்காக 9 மாவட்டத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து கல்வி அமைச்சு அறிக்கையினை பெற்றுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு அமைய, 3,748 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் எஞ்சியுள்ள டிப்ளோமாதாரிகளை மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியைக் பயில்வதற்காக இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வியியல் பீடப் பிரிவு அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 4 ஆயிரம் மாணவர்களும், 201 ஆம் ஆண்டு பெறுபேறுகளுக்கு அமைய மேலும் 4 ஆயிரம் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
கல்வியியல் கல்லூரிகள் மட்டத்தில் நடைபெறும் நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு கல்லூரிக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிய பயிலுனர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.
எதிர்வரும் 20 ஆம் திகதி அந்த பெயர் பட்டியலை பதிவு செய்வதற்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த மாத நடுப்பகுதியளவில் இந்தப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வது இதன் நோக்கமாகும் என்று மேலும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க