அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே வடமாகாண நீர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
குடிநீர் தேவை என்பது வடமாகாணத்திற்கு எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கிணங்க பல்வேறு வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து கொண்டிருக்கிறோம்.
எனவே அதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிற்கும் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுவரைக்கும் தேவையான நீரின் அளவு 70 எம்சிஎம் மாத்திரமே.
தற்போது வடமராட்சியில் ஒருதரம் பெய்யும் மழையின் வீழ்ச்சியின் போது 128 எம்சிஎம் நீர் விழுகிறது.
இங்கு இருக்கின்ற அனைத்து திணைக்களங்கள், அமைச்சுக்களும் மழையில் தங்கியிருக்கின்ற முயற்சியை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் செய்யும் பிழைகள், மக்களுக்கு நாம் செய்யும் துரோகத்தின் காரணமாக ஒரு பத்து வருடத்திற்கு இறைவன் மழையை தராமல் விட்டால் என்ன நிகழும் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே இது ஒரு தேசிய அளவிலான பாரிய பிரச்சனை இது எமது நாகரிகம் சம்மந்தமானதுடன் எதிர்காலம் தொடர்பானது.
எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் அதற்கு அனைத்து திணைக்களங்களும் இணைந்து பணியாற்றவேண்டும் என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க