காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய ஜனாதிபதி நேற்று ரத்து செய்தார்
அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் யோசனையை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இந்தியாவின் வட கோடியில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள எழில் மிகுந்த மாநிலம் காஷ்மீர். இந்த மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 370, 35ஏ ஆகிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சொத்து வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது.
காஷ்மீர் மாநில பெண்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுடைய சொத்துரிமை பறிபோய்விடும்.
ராணுவம் வெளியுறவு தகவல் தொடர்பு தவிர மற்ற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.
அந்த மாநில சட்டசபையின் பதவி காலமும் 6 ஆண்டுகள் ஆகும். அந்த மாநிலத்துக்கென்று தனி அரசியல் சட்டமும் தனி கொடியும் உண்டு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று பாரதீய ஜனதா வாக்குறுதி அளித்தது.
தேர்தலில் அந்த கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது.
கருத்து தெரிவிக்க