கட்டுரைகள்

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!

இலங்கை அரசியல் களத்தில் இம்மாதம் முக்கிய சில அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளதால் சர்வதேச சமூகத்தின் பார்வையும் கொழும்பு பக்கம் திரும்பியுள்ளது.

அத்துடன், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் என்ன நடக்கின்றது என்பதை கழுகுக்கண்கொண்டு கண்காணித்துவருகின்றனர்.

புதிய அரசியல் கூட்டணி, பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள் இம்மாதம் வெளிவரவுள்ளதால் அரசியல் களம் பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி
தலைமையில் கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மலரவுள்ளது. அன்றைய தினம் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

தேசிய ஜனநாயக முன்னிணி என்ற பெயரில் உதயமாகவுள்ள புதிய கூட்டணியில் பல சிவில் அமைப்புகளும் இணையவுள்ளன.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்தவும் 11 ஆம் திகதி விசேட அறிவிப்பு

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தை ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டின்போதே கட்சி தலைமைப்பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கும் யோசனையை தற்போதைய தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைப்பார் என்றும், அதனை பஸில் ராஜபக்ச வழிமொழிவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மாநாட்டில் சிறப்புரையாற்றும்போது கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அறிவிப்பாரென்றும், அது பெரும்பாலும் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்கும் என்றும் எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவித்த பின்னர் மறுநாள் காலை கண்டி தலதாமாளிகைக்கும், முன்னேச்சரம் கோவிலுக்கும் செல்வதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்பின்னர் மாவட்ட ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளும் இடம்பெறும் என கூட்டு எதிரணி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அத்துடன், ஜே.வி.பியும் மெகா கூட்டணி அமைத்தே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் எதிர்வரும் 18 ஆம் திகதி பெயரிடப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க