நேர்காணல்கள்

தமிழ்க் கூட்டமைப்பு சரணாகதி அரசியலையா நடத்துகிறது?

“ இலங்கையை வளமாக்கி நாட்டின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு முகவரி பெற்றுக்கொடுத்த மலையகத்தில்வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகள்கூட இன்னும் முழுமையாக தீர்க்கப்படாதுள்ளன. எனவே, அவற்றுக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்படவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ‘ஊடகன்’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மலையக மக்களை
ஓரங்கட்டமாட்டோம்!

தமிழ் பேசும் மக்களை அரவணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கின்றது. எனவே, மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே அர்த்தமுள்ள – நீடித்து நிலைக்ககூடிய – கௌரவமானதொரு அரசியல் தீர்வை கோரிநின்கின்றோம்.

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் அனைத்துவிதமான உரிமைகளுடனும் வாழும் நிலை உதயமாகவேண்டும். அதே எங்களில் எதிர்பார்ப்பும்கூட. அதை அடைவதற்காக அறவழியில் போராடுவதுடன் அழுத்தங்களையும் கொடுத்துவருகின்றோம்.

மலையகத் தமிழர்களை புறந்தள்ளிவிட்டு உரிமைகளை பெறுவது எங்கள் நோக்கம் அல்ல. தீர்வுப்பொறிக்குள் அவர்களும் பங்காளிகளாகவேண்டும். தந்தை செல்வா  உட்பட வடக்கிலுள்ள அனைத்து தமிழ்த் தலைவர்களினது நிலைப்பாடு இதுவாகவே இருந்தது.

தமிழ்க் கூட்டமைப்பு சரணாகதி
அரசியலையா நடத்துகிறது?

தமிழ் மக்களின் நலன்கருதியே நிதானமாகவும், பொறுமையுடனும் செயற்பட்டுவருகின்றோம். இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமது மக்களுக்காக பெறக்கூடிய அனைத்தையும் பெறுவதே எங்கள் நோக்கம். இதற்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோம்.

எனினும், அரசாங்கத்தால் இழைக்கப்படும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு நாம் ஒருபோதும் பின்நின்றதில்லை. இது மக்களுக்கும் தெளிவாக புரியும். காழ்ப்புணர்ச்சி அரசியல் நடத்துபவர்களே மக்களுக்கான அரசியலை சரணாகதி அரசியல் என விமர்சித்துவருகின்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை
எதிர்த்தது ஏன்?

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஓர் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால் இன்னோர் அரசாங்கம் ஆட்சிக்கு வரும். அப்படியானால் தற்போதைய நிலைமையில் எந்த அரசாங்கம்  ஆட்சிக்கு வரும் என்று எமக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அரசாங்கம் கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கமாகத்தான் உள்ளது. அந்த ஆட்சியில் தமிழர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டதா? அல்லது தீமைகள் ஏற்பட்டதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தோம்.

அந்த ஆட்சியில் தமிழர்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார்கள். தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் செயற்பட்டவர்களை மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா?

மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா? இதனைக் கருத்தில்கொண்டுதான் தற்போதைய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக நாம் வாக்களித்தோம்; அதனைத் தோற்கடித்தோம்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம்மீது எமக்கும் எமது மக்களுக்கும் நம்பிக்கையில்லை. இந்த அரசாங்கம் ;மீது பல விமர்சனங்கள் உள்ளன. எனினும், கடந்த அரசாங்கத்தைவிட  இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு சில நன்மையளிக்கும் கருமங்களைச் செய்து வருகின்றது.

அதேவேளை, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசாங்கத்தின் தலைமை உறுதியாக உள்ளது. சில விடயங்களைத் தீர்த்துவைப்பதாக எமக்கு நேரில் உறுதிமொழிகளைத் தந்தது.

இன்னமும் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் இந்த அரசாங்கம் ஊடாக தமிழர் நலன் சார்ந்த கருமங்களை செய்து முடிக்க வேண்டும். இதனையும் கருத்தில்கொண்டுதான் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தோம்.

கருத்து தெரிவிக்க