உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் அபிவிருத்திக் குழு கூட்டம்: பல்வேறு விடயங்கள் ஆராய்வு

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை(1) காலை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

2019 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக வீதி, போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம், சுகாதாரம், வீட்டுத்திட்டம் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் அகழ்வு செய்யப்படுகின்ற மண் வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்றல்,சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் சட்ட விரோத மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாகவும்,  இதனால் மக்கள் பாதீப்படைவதாகவும் குறித்த கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் பல காணிகளை வன வள பாதுகாப்பு திணைக்களம் தன் வசப்படுத்தி வைத்துள்ளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு, வீட்டுத்திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கடற்படை,பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

எனினும் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 104 பட்டதாரிகளுக்கான பயிலுனர் நியமனம் இன்று வியாழக்கிழமை மதியம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

குறித்த நியமனக் கடிதங்களை மாவட்ட அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர், அமைச்சர் றிஸாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க