இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்காக “தமிழர் கல்வி மேம்பாட்டு ஒன்றியம்” எனும் பெயரில் புதிய அமைப்பொன்று உதயமாகியுள்ளது.
இலங்கையில் தமிழர் கல்வியை மேம்பாடடையச் செய்யும் நோக்கில் கடந்த சனிக்கிழமை 27.07.2029 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து கல்விமான்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை பேராசிரியர்களான எஸ்.சந்திரசேகரம், எம்.கருணாநிதி ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் கல்வி மேம்பாடு காலத்தின் தேவை என்றும் அதற்காக அர்ப்பணிக்க தான் தயாராகவுள்ளதாகவும் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் தனதுரையில் குறிப்பிட்டார்
தமிழர்களின் கல்வி மேம்பாடு என்பது அதனோடு இணைந்த கலை, பண்பாடு, பாரம்பரியம், விளையாட்டு, அறநெறி என பரந்துபட்ட பொருள் கொள்ளத்தக்கது என பேராசிரியர் கருணாநிதி தனதுரையில் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று கனதி சேர்த்தனர்.
தமிழர் கல்வி மாநாடு ஒன்றை நடத்துவதற்கான முன்னோடி கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
இதன்போது தமிழர் கல்வி மாநாட்டுக்காக வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பில் சமகால கல்வி நிலைமைகள் குறித்து ஆராய்வதுடன் பின்னடைவுகளை இனங்கண்டு அவற்றினை சரி செய்து மேம்படுத்துவதற்குரிய ஆய்வுகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நாடுமுழுவதும் அனைவரும் இணைந்து பயணிக்கும் வகைகள் பொறுப்புகள் தமக்குள் பகிர்ந்தளிக்கபட்டன
கருத்து தெரிவிக்க