பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா என சந்தேகம் எழுகின்றது என நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டும் என தெரிவிக்கிறார்.
அதற்கு பதிலளித்த சபை முதல்வர் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50ரூபா கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்காக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்ய 600 மில்லியனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது.
தோட்டத்தொழிலாளர்களுக்கான 50ரூபா கொடுப்பனவு தொடர்பில் சபை முதல்வர் வழங்கியிருக்கும் பதிலும் அமைச்சரவைக்கு பிரதமர் வழங்கியிருக்கும் முன்மொழிவும் வேறானவையாக இருக்கின்றது.
இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதனை வலியுறுத்தவே நாம் அரசாங்கத்தை தலையிட செய்தோம்.
தற்போதைய முறைமையில் இருந்து பெருந்தோட்டத்துறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு பொறுப்பான அமைச்சர் நவீன திசாநாயக்க மக்களின் பிரதிநிதியாக அல்லாது கம்பனிகளின் பிரதிந்தியாகவே செயற்பட்டு வருகிறார்.
ஆகவே இந்த துறை சிறுதோட்ட தொழிலாக மாற்றப்படல் வேண்டும். எதிர்வரும் தேர்தல்கள் எதுவாயினும் எமது பிரதான நிலைப்பாடு இதுவாகவே இருக்கும்.
எனவே அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
50 ரூபாய் கொடுப்பனவை வழங்க தமது அமைச்சரவையில் இருந்து நிதி ஒதுக்க முடியாதென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ள நிலையில் அவர் தொடர்பில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க