நேர்காணல்கள்

‘மலையகத் தமிழர்களை கைவிடமாட்டோம்’

“ மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும். அவர்களுக்கு உரிய வகையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுதல் அவசியம். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் கைக்கூலிகளாகவே அடக்கி ஆளக்கூடாது. சிறுதோட்ட உரிமையாளர்களாக அவர்களின் வாழ்வுநிலை மாறவேண்டும்.”

இவ்வாறு ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்தெரிவித்தார்.

‘ஊடகன்’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதிகாரப்பகிர்வு

“ இலங்கையில்வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு கௌரவமானதும், நீடித்து நிலைக்ககூடியதுமான அரசியல்தீர்வொன்றை பெறுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராடிவருகின்றது.

தமிழ் பேசும் மக்கள் என விளிக்கையில் அதற்குள் மலையகத் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். எனவே, அவர்களின் அபிலாசைகளை புறந்தள்ளும் வகையில் நாம் ஒருபோதும் செயற்படமாட்டோம்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வாறான உரிமைகள், சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றனவோ அவை அனைத்தும் மலையகத் தமிழர்களுக்கும் கிடைக்கவேண்டும். இதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

குறிப்பாக மலையக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகாணப்படவேண்டும். தொழிலாளிகள் என்ற நிலைமைமாறி அவர்கள் முதலாளிகளாகவேண்டும். தோட்ட நிலங்கள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுதல் அவசியமாகும். இதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

தமிழர் பக்கமே சர்வதேசம்

இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு செய்கின்றன.

புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எல்லாம் முடிவடைந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளன.

வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன. அவை மேலும் துரிதப்படுத்தப்படவேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்திவருவதுடன், சர்வதேசத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றோம்.

19 ஆவது திருத்தச்சட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிநிலையை மறந்து கருத்துகளை முன்வைத்துவருகின்றார். தான் என்ன கதைக்கின்றார் என்பது அவருக்கே புரியவில்லை.

2015 இல் பதவியேற்கும்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அறிவித்தார். தற்போது வேறொரு கதையை கூறுகிறார். அவரை நம்பமுடியாமல் உள்ளது.

குறிப்பாக 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனநாயக அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, அச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதியின் அறிவிப்புக்கு  கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” என்றும் செல்வம் எம்.பி. தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க