ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்வதில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் பனிப்போர் இடம்பெற்று வருகின்றது.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் போது பிளவு ஏற்படுமா? என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கக் கூடிய வேட்பாளர்கள் பட்டியலை பொதுக் கூட்டங்களில் அறிவிக்கும் போது சஜித் பிரேமதாசவின் பெயரை விட்டுவிட்டே ரவி கருணாநாயக்க கூறிவருகின்றார்.
தந்தையின் செல்வாக்கை வைத்து ஜனாதிபதியாக வருவதற்கு சிலர் முயற்சிக்கின்றார் என மறைமுக தாக்குதல்களையும் மேடைப் பேச்சுக்களில் தெரிவித்து வருகின்றார்.
தொகுதியில் கட்சியை வெற்றிபெறச் செய்ய முடியாத மக்கள் ஆதரவு இல்லாத ஒருவர் எனவும் சாடி வருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க.
சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவும் அண்மையில் தன்னை எதிர்கால ஜனாதிபதியின் மனைவி எனக் கூறியதனால், ஊடகங்களும் பௌத்த அடிப்படைவாத குழுக்களும் பெரும் எதிர்ப்பையும் விசனத்தையும் தெரிவித்தன.
எது எவ்வாறு இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரதித் தலைவர் சஜித் சார்பான ஒரு குழுவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான ஒரு குழுவும் திரைமறைவில் செயற்படுகின்றது என்பது அரசியல் விமர்சகர்களின் வெளிப்படையான கருத்தாகவுள்ளது.
கருத்து தெரிவிக்க