நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா – ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
இந்த அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அலுவலகத்துக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 154.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான அலுவலகங்கள் நான்கு குருநாகல், மட்டக்களப்பு, வவுனியா, காலி ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால, நுவரெலியா மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுமார் 154.4 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுகின்ற இந்த ஆட்பதிவு திணைக்களத்தினால் தோட்ட தொழிலாளர்களே பெரும்பாலும் நன்மை அடைவர்.
140 இலட்சம் தோட்ட தொழிலாளர்கள் இலங்கை முழுவதும் வாழ்கின்றனர். அதில் 90,000 நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
இந்த திணைக்களம் அமைக்கப்பட்ட பின்னர் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
காரணம் ஒரே நாளில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் இங்கு உள்ளது.
மத்திய மாகாணத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி கல்வி மற்றும் சுற்றுலாவை அபிவிருத்தி செய்ய முனைகின்றோம்.
அதற்கமைய இங்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கேபிள் கார் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
எனவே இவற்றில் கட்சி பேதமின்றி அணைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். கட்சி விடயங்களை தேர்தல் காலங்களில் மாத்திரம் பார்த்துக் கொள்ளலாம்.
இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளோம். அந்த ஆளுமை மிக்கவர்கள் எமது கட்சியில் உள்ளனர்.
தற்போது நாட்டில் காணப்படும் பாரிய பிரச்சினை வேலைவாய்ப்பு பிரச்சினையாகும். இதற்கு தீர்வு காண வேண்டியது கட்டாயமாகும்.
மக்களின் துன்பத்தை அறிந்து நாம் செயற்பட வேண்டும். இதற்கு அனைத்து வகையான பேதங்களையும் மறந்து பயணிக்க வேண்டும்.
அவ்வாறு பயணித்தாலே 21ம் நூற்றாண்டில் சிறந்த ஒரு நாடாக இலங்கையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.
( நிருபர் க.கிஷாந்தன் )
கருத்து தெரிவிக்க