உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தமிழ் கூட்டமைப்பும், முற்போக்கு கூட்டணியும் இணைய வேண்டும்!

தமிழ் முற்போக்கு கூட்டணியும், தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டால் தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளை இலகுவில் வென்றெடுக்ககூடியதாக இருக்கும்.” என இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான  வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனுடன் இணைந்து வவுனியாவுக்கு களப்பயணம் மேற்கொண்டிருந்த வேலுகுமார் எம்.பி., அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

“ஒற்றுமையே பலம் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த  நான்கு ஆண்டுகாலப்பகுதிக்குள் நிரூபித்துக்காட்டியுள்ளது.

அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை சமாந்தரமாகவென்றெடுத்துவருகின்றோம்.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபிறகு ‘ஒற்றுமையே’ எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதமாகும்.

அதனை உரிய வகையில் பயன்படுத்தினால் நாளை நமதாகும்.  இதை உணர்ந்ததால்தான் கடந்தகாலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அரசியல் பயணத்தை தொடர எமது தரப்பு பல தடவைகள் முயற்சித்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான பதில்கள் – சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.

இதனால் அவர்களை,  அவர்களுக்கே  உரிய பாதையில் பயணிக்க இடமளித்தோம். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் அணுகுமுறை இன்று  தோல்விகண்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, இனியாவது ஆளுந்தரப்பில் வலுவான கூட்டணியாக விளங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு பயணிக்க கூட்டமைப்பு முயற்சிக்கவேண்டும்.

அவ்வாறு இல்லையேல் அதோ கதிதான். சர்வதேசத்தை முழுமையாக நம்புவதற்கு முன்னர் நாம் பலமாக இருக்கவேண்டும். எமக்கான பேரம் பேசும் சக்தி வலுவடையவேண்டும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

இன்று எமது தலைவர் மனோ கணேசன் அமைச்சரவையில் இருப்பதால் பல விடயங்களை சாதித்துவருகின்றார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவையில் அழுத்தம் கொடுத்தவர் இவர்தான். அதுமட்டுமல்ல, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, இந்து சமயத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை என பல்வேறு விடயங்களை முன்னெடுத்துவருகின்றார்.

பல வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்தபோதுகூட தமிழ் மக்களின் நலனுக்காக, அவர்களின் ஒற்றுமைக்காக தேர்தல் காலங்களில் வடக்கில் களமிறங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார்.

அரசியலில் பொறுமையும், நிதானமும் அவசியம். ஆனால், அளவு கடந்த பொறுமையும், மித மிஞ்சிய நிதானமும் ஆபத்தையே ஏற்படுத்தும். இதை உணரந்து ஓர் அணியாக செயற்பட  கூட்டமைப்பு முன்வரவேண்டும்.’’  என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க