சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்காக வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மாணவர் சிப்பாய் படையணியில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று திங்கட்கிழமை வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரசிங்க பல்வேறு நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் கலந்து கொண்டார்.
இதன் ஒரு அங்கமாக ஸ்கந்தவரோதயா பாடசாலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த பிரதமருக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி ஆலாத்தி எடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொன்னாடையும் அணிவித்து பிரதமருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இல்லாத நடமுறையாக தமிழ் மாணவர்களின் ஆயுதம் தாங்கிய அணிவகுப்பு மரியாதை பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இவ்வணிபகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடற்படை) அணியினர் வழங்கியிருந்தனர்.
சிங்கள மொழியில் வழங்கப்பட்ட கொமான்டிங் (அறிவுறுத்தலுக்கு) அமைய தமிழ் மாணவர்கள் இவ் அணிவகுப்பு மரியாதையினை பிரதமருக்கு வழங்கியிருந்தார்கள்.
ஆரம்பத்தில் மாணவ சிப்பாய் படையணி உருவாக்கத்திற்கு (தமிழ் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு) தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதும், கால போக்கில் அது தொடர்பில் பேசுவதோ அல்லது, அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் எதிர்ப்பு வெளியிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தரப்பினை சேர்ந்தவர்களும் பிரதமர் ரணில் விக்கரம சிங்கவுடன் இணைந்து ஆயுதம் தாங்கிய மாணவர்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையினை பிரதமருடன் இணைந்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
கருத்து தெரிவிக்க