மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பாஜகவை வீழ்த்த தேர்தல் களத்தில் இல்லை என்றால், உயிரோடு இருப்பதில் அர்த்தமே இல்லை. அதனால் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். மோடியின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இது பாஜவுக்கு எதிரான தேர்தல்தான் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் இரண்டாவது இடத்தைப் பெறும். எடப்பாடி கட்சி மூன்றாவது இடத்துக்கு வரும்.
நான்தான் 32 ஆண்டுகாலமாக ஒரே கொள்கையைப் பேசிக் கொண்டிருக்கிறேன். இடம் மாறினாலும் தடம் மாறாமல் பயணிக்கும் ஒரே ஆள் நான் மட்டும்தான்” என்றார் நாஞ்சில் சம்பத்,
பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் மதிமுகவுக்குச் சென்ற அவர், ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு அணி தாவினார். பின்னர் தினகரனின் அமமுகவுக்குச் சென்ற சம்பத், தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க