சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கொத்மலை, பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில் இன்று பகல் இந்த அர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் சுமார் 100 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மல்வேவ ஆரம்ப பாடசாலையில் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதனால் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 நாட்களாக பாடசாலை மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தாமதம் அடைந்துள்ளது.
இதனால் மல்வேவ விகாரையில் தற்காலிகமாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அங்கு பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுவதாகவும், பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், அந்த விகாரையின் மரங்களுக்கு கீழும், தர்ம போதனை நடைபெறும் மண்டபத்தின் தரையிலும் அமர்ந்து மாணவர்கள் கற்க வேண்டிய அவல நிலை காணப்படுதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், பாடசாலை அமைந்துள்ள வளாகம் வனப்பகுதி என்பதாலும் பாடசாலைக்குரிய வளங்கள் இல்லாமையாலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அங்கலாய்கின்றனர்.
இதனை கருத்திற் கொண்டு மாணவர்களை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதிக்குமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக இந்த முறை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பிரதேசத்தில் நடமாடும் சிறுத்தைகள் காரணமாக விலங்குகள் பல காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கொத்மலை வலய கல்வி பணிமனைக்கும், நுவரெலியா வன விலங்கு உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது மாணவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, உரிய பதில் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க