தமிழகத்திலிருந்து குணா
அஷ்டம சனியெனும் அரக்கனை தேவனாக்கும் இரகசியத்தை இந்த இதழில் பார்ப்போம்.
எனக்கு தெரிந்த ஜோதிடர்கள் ஒரு சிலர்கூட ஜோதிடம் பார்க்கும்போது ஜாதகரிடம்! உங்கள் வீட்டில் எவருக்கேனும் அஷ்டம சனி நடக்கிறதா? என்று கேட்பார்கள். ‘இல்லை’ என்று சொன்னால் பலனை சொல்ல ஆரம்பிப்பார்கள்!
‘ஆமாம்’ என்று சொன்னால் ஜாதகங்களை திருப்பிக்கொடுத்து விட்டு, ‘அவருக்கு அஷ்டம சனி முடிந்ததும் வாருங்கள்’ என்று சொல்லியனுப்பிவிடுவார்கள்.
நல்ல தசா புத்திகள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நடந்தாலும், குடும்பத்தில் ஒருவருக்கு அஷ்டம சனி நடந்தால் அது எவருக்குமே நன்மை எதையும் நடக்கவிடாது’ என்றும் அறுதியிட்டு கூறுவார்கள். அது உண்மையும் கூட!
ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு வயது குழந்தைக்கு அஷ்டம சனி நடப்பதாக வைத்துக்கொள்வோம். அக்குழந்தைக்கு சொந்த உழைப் பேது? குழந்தை தாய், தந்தையை அல்லவா சார்ந்து வாழ்கிறது! குழந்தைக்கு அவசியப்படும் தேவைகள் எல்லாம் இவர்களால்தானே பூர்த்தி செய்யப்படவேண்டும்? இந்நிலையில் குழந்தைக்கு அஷ்டம சனி நடப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத வம்பு வழக்குகளும், வருமான பற்றாக் குறைகளும், நிம்மதி இழப்பும் ஏற்படத்தானே செய்யும்! இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்!
‘என் குழந்தை ஜாதகத்தால் என்வாழ்வு கெட்டது’, ‘என் தங்கை யின் திருமண தோஷத்தால் எனக்கு கல்யாணம் தடைபட்டது’, ‘என் மனைவியின் மாங்கல்ய பாதிப்பால் எனக்கு உயிராபத்து ஏற்பட்டது’ என்று ஒருசிலர்அரைகுறை ஜோதிட ஞானத்தால் அடுத்தவரை குற்றவாளியாக்கி வெறுப்பைக் காட்டுகின்றனர். இது மாபெரும் குற்றமே!
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!
‘உங்கள் வாழ்வு கெடும்போது இந்த குழந்தை பிறந்து, உங்களால் அவதிப்படபோகிறது! ‘உங்கள் தங்கையாய் பிறந்ததால்தான் திருமணமாகாமல் உங்கள் தங்கை பாதிக்கப்படுகிறாள்!’ உங்களைப் போல் ஆயுள் கண்டம் உள்ளவரை திருமணம் செய்துகொண்டு துன்பப் படவேண்டும் என்பது உங்கள் மனைவியின் தலைவிதி! என்றெல்லாம் நடக்கும் விஷயங்களுக்கு உங்களையும் பொறுப்பாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்! ஏனெனில் அப்படியொரு அமைப்பின் சூட்சுமத்தோடுதான் அனைவருமே பிறக்கிறோம்!
எதுவுமே பிறரால் தரப்பட்டதல்ல.நம் ஜாதகப்படியே எல்லாம் கொடுக்கப்படுகின்றது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாது.
குழந்தை இருக்கக்கூடாது என்ற விதியுள்ளவன், எத்தனை திருமணம் செய்தாலும் அந்த மனைவிமார்களின் ஜாகத்திலும் ‘குழந்தை இருக்கக்கூடாது’ என்ற விதியே குடிகொண்டிருக்கும். உடனே, ‘குழந்தை இருக்கும் என்று ஜோதிடத்தில் மூலமாய் உறுதி செய்துகொண்டு திருமணம் செய்தால்…!?’ என்று விளையாட்டாய் கூட யோசிக்காதீர்கள்! திருமண தரகர்மூலம், ‘போலி ஜாதகம்’ தந்தோ, ‘போலி ஜோதிடர்’ மூலம் தவறான வாக்கை தந்தோ, ‘ விதி தப்பாட்டம் ஆடி விபரீதங்களை உண்டு பண்ணிவிடும்!
நமது பிறப்பின் அடி நாதமாகவே விளங்குவது இந்த ஒரே வாசகம்தான்!
‘நன்மையும், தீமையும் பிறர்தர வாரா!’
சரி, அஷ்டம சனியில் நடக்கும் தீயவைகளை தடுக்கும் ஆற்றல் நம் கைகளுக்கு இருக்கிறதா? ‘எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள், எதிர்பாராமல் வரும் தொழில் வீழ்ச்சி, எதிர்பாராமல் ஏற்படும் கொடிய நோய், எதிர்பாராமல் எதிரியாகும் நம் சொந்தங்கள்’ என்று வரும் `எதிர்பாராமல்’களை எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறதா?
‘தீய கர்மாக்களை மட்டுமே கொடுத்து, நம் வாழ்வை திகிலடையச் செய்யும் அஷ்டம சனியிடம் நாம் அனுசரணையை எதிர்பார்க்க முடியுமா? என்றெல்லாம் நாம் கலங்க வேண்டாம்!
அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லாத, பாதுகாப்பில்லாத வாழ்வைத்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்! இந்த நொடி நம் இருதயம் ஓடுவதை நிறுத்தினால், அடுத்த நொடி நாம் உயிரற்ற பிணமே! இப்படியான கருணையற்றவாழ்வுக்கு நீடித்த ஆயுளை தந்து கருணை காட்டுவதும் ஆயுள் காரகன் சனியே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!
அப்படிப்பட்டவர்அஷ்டம சனி காலத்திலும் ஒரு வழி காட்டாமல் இருப்பாரா? இந்த இதழிலும் ஒரு சிறிய கதை!
‘உன் உயிருக்கு ஆபத்து வரும்’ என்று சூரிய பகவான் எச்சரித்தும் தன் உடலோடு ஒட்டிய கவசத்தை அறுத்தெடுத்து இந்திரனுக்கு தானம் செய்தவன்.. தன்னுயிர்பிரியும் வேளையில்கூட, ‘தான் செய்த தானதர்மத்தின் பலனை ‘ கிருஷ்ணனுக்கு வாரி வழங்கிய வள்ளல்… கர்ணன்! அப்படிபட்ட கர்ணன் இறப்பிற்கு பிறகு சொர்க்கம் செல்கிறான்! அங்கே அவன் செய்த தானதர்மத்தின் விளைவாக சிறப்புடன் இருக்கிறான், ஒரே ஒரு குறையை தவிர்த்து! அது என்னவென்றால், அவனுக்கு ஓயாமல் பசிக்கிறது! எவ்வளவு தின்றாலும் அடுத்த நொடியே அது கரைந்து ‘ பசியெனும் தீ’ அவன் வயிற்றை சுடுகிறது!
இதிலிருந்து விடுபட எமதர்மராஜனிடம் வழிகேட்க, ‘ கர்ணா, நீ உன் வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சுவை… பசி நிற்கும்! என்று சொல்ல.அது போலவே கர்ணன் செய்ய, பசி உடனே நிற்கிறது.! ஆனால் விரலை வாயிலிருந்து எடுத்தால் மறுபடியும் பசி வந்து விடுகிறது!
‘இதென்ன மாயம்?’ என்று கர்ணன் கேட்க, எமதர்மன், ‘கர்ணா, தான தருமத்தில் உன்னைவிட சிறந்தவர் எவருமில்லை! ஆனாலும் நீ அன்னதானம் மட்டும் செய்ததே இல்லை! இதனாலேயே பசியெனும் நெருப்பு உன்னை வாட்டுகிறது! ஒரே ஒருமுறை மட்டும் சாலையில் உன்னெதிரே கடும் பசியில் வந்த வழிப்போக்கன் உன்னிடம், “ஐயா பக்கத்தில் ஏதாவது அன்னதான சத்திரம் இருக்கிறதா?’ என்று கேட்டான். நீ ‘இருக்கிறது’என்று தலையசைத்து உன் வலது கை ஆள்காட்டி விரலால், இருக்கும் திசையை சுட்டிக்காட்டினாய். அந்த பலன் உனது வலது கை ஆள்காட்டி விரலில் இருக்கிறது! அதனால்தான் அந்த விரலை வாயில் வைத்ததும் உன் பசியடங்குகிறது!’ என்று சொல்ல, கர்ணன் அதிசயித்தான்!
`அன்னம்’ எங்கிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய விரலுக்கே இத்தனை சக்தியென்றால், அன்னதானம் செய்யும் கைகளுக்கும், அதை செய்யும் மனிதர்களுக்கும் எத்தனை பலன்கள் கிடைக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்!
அனாதைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், உணவின்றி தவிப்போர்கள் அனைவருமே சனியின் ஆதிபத்யத்தில் உள்ளவர்களே! அவர்கள் பசிக்கு சிறிது உணவிட்டாலே சனி பெரிதும் மகிழ்ந்து போவார்!
அன்னதானம் ஒன்றே அஷ்டம சனியெனும் அரக்கனை தேவன் ஆக்கும் இரகசியம்!
‘அருட் பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி’ என்றுரைத்த வள்ளலார்கர்மாவி லிருந்து விடுபட ‘அன்னதானமே மகா பரிகாரம்’ என்றார்.
அந்த வள்ளலாரின் ஜென்ம நட்சத்திரம் பூசம்! அதுவும் சனியின் நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது! இன்றும் அவர்ஏற்றி வைத்த ‘ அணையா அடுப்பு’
பலரது பசிக்கு அருமருந்தாக இருந்து கொண்டே இருக்கிறது!
கருத்து தெரிவிக்க