உள்நாட்டு செய்திகள்புதியவை

அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஜனநாயக போராளிகள் கட்சி சந்திப்பு

மாறி வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பிலான ஐனநாயக போராளிகள் கட்சிக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் ஏப்ரல் 21 தாக்குதல்கள், தெற்கின் சமகால அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்புப் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது, தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்புப் பொறிமுறைகளில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுக்குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு மதிப்பளித்து, அமெரிக்காவினால் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குமாறும் ஜனநாயகப் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழரின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஜனநாயகப் போராளிகளின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவும் கோரப்பட்டது.

குறித்த சந்திப்பு சம்பந்தமாக கூறிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் குழுவின் சிரேஷ்ட துரைசார் அலுவலர் டேமியன் மெர்பி, இந்தச் சந்திப்பு தமிழர் அரசியற் பரப்பை மேலும் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க