உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சியினர் நடந்துகொண்ட விதமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ முக்கியஸ்தர் எம்.கே. சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அநாகரிகமான முறையில் செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்ட போராட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கொச்சைப்படுத்தியதை கண்டித்தார்.

யுத்தம் இடம்பெற்ற இறுதி நாட்களிலும், அதற்கு பின்னரும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் தமிழர் தாயகத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக போராட்டங்களையும், கவனயீர்ப்பு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

அதேவேளை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியோரங்களில் முகாமிட்டும் போராட்டங்களை நடத்தி வருகின்ற இவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வருடாந்தம் நேரில் சென்றும் நீதி கோரி வருகின்றனர்.

எனினும் ஜெனீவா அமர்வுகளிலும், சர்வதேச அரங்கிலும் சிறிலங்கா அரசை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னின்று காப்பாற்றியும் வருவதால் கடும் ஆத்திரமடைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Attachments area

கருத்து தெரிவிக்க