பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே இவ்வாறு விரைவில் பதவிப்பிரமாணத்தை செய்யவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
இவர்கள் தவிர, முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட பதவிகளை இராஜினாமா செய்த 09 பேரும் மீண்டும் பதவிகளை ஏற்கவுள்ளதாக அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும் இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதியை அமைச்சர் மனோ கணேசன் வெளியிடவில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் உட்பட 09 பேர் பதவிகளிலிருந்து கடந்த 03ஆம் திகதி விலகியிருந்தனர்.
இதன்படி ரவூப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுப் பதவியை வகித்ததோடு, ரிசாத் பதியூதீன் – கைத்தொழில், மீள்குடியேற்ற மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தார்.
எம்.எச்.எம். ஹலீம் – அஞ்சல் அலுவல்கள், முஸ்லிம் விவகார அமைச்சராகவும், கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிவகித்தனர்.
இதேவேளை எச்.எம்.எம். ஹரீஸ் – உள்ளுராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராகவும், பைசால் காசிம் – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிவகித்திருந்தனர்.
மேலும் எம்.எஸ்.எஸ். அமீர் அலி – கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சராக இருந்ததோடு, அலிசாஹிர் மௌலானா – சமூக வலு வூட்டல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்தார்.
ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரான அப்துல்லா மஹ்றூப் – துறைமுகங்கங்கள், கப்பல்துறை பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க