உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வத்தளை ஹுனுபிட்டியவில் தமிழ் பாடசாலை ஜூலையில் அங்குரார்ப்பணம்

கம்பஹா மாவட்ட வத்தளை தமிழ் பாடசாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, வத்தளை ஹுனுபிட்டியவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நன்கொடையாளர்கள் மாணிக்கவாசகம் குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ள காணியில் தற்சமயம் இருக்கும் கட்டிடத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபா. 78 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நான்கு மாடி பாடசாலை கட்டிடத்திற்காக, முதற்கட்டமாக எனது அமைச்சிலிருந்து 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை இன்று கையெழுத்திட்டுள்ளேன். இதற்கான அடிகல்லும் அன்றைய தினம் நாட்டப்பட்டு கட்டிட பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்களை கடந்த வருடமும், இவ்வருடமும் இரண்டு முறை அமைச்சரவையில் சமர்பித்து அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி என்ற பெயரில் முதலாம் வகுப்பிலிருந்து உயர் வகுப்புகள் வரை கொண்ட தேசிய பாடசாலையாக இது நடத்தப்படும் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளேன் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, கம்பாஹா மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த இந்த தமிழ் பாடசாலை தேவையை நிறைவேற்றி வைக்கும் முகமாக நன்கொடையாளர்கள் மாணிக்கவாசகம் குடும்பத்தினர் இந்த காணியையும், அங்கே அமைந்துள்ள கட்டிடத்தையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அங்கே தமது மறைந்த மைந்தனின் பெயரில் தமிழ் இந்து பாடசாலையாக இற்கு அமைய வேண்டும் என்பதுவே மாணிக்கவாசகம் அவர்களது கனவு கோரிக்கையாகும். அந்த அடிப்படையிலேயே எனது அமைச்சரவை பத்திரங்கள் அமைந்தன. புதிய நன்கு மாடி கட்டிடத்துக்கான 78 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் முதற்கட்டமாக எனது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சிலிருந்து ரூபா. 27 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் வத்தளை வாழ் தமிழ் மக்களின் மிக நீண்டகால எதிர்பார்ப்பு கனவும் நனவாகின்றது.

தமிழ் பாடசாலை பயன்பாட்டிற்காகவே இந்த காணி அரசுக்கு நன்கொடையாக மாணிக்கவாசகம் குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேவையை தவிர்த்து வேறு தேவைக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட முடியாது. அப்படி பயன்படுத்தப்பட்டால் இந்த காணி மீண்டும் நன்கொடையாளர்களிடம் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலேயே இது தொடபான என் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இங்கே அமையும் அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி, முதலாம் வகுப்பிலிருந்து செயற்படும் ஒரு தேசிய பாடசாலையாகும். இது தேவை கருதியே மாகாணசபை பாடசாலையாக அமைக்கப்படவில்லை. வத்தளை ஒளியமுல்லை பிரதேசத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன் ஒதுக்கப்பட்டு பலரால் அடிக்கல் நாட்டப்பட்டும் கட்டப்படாத பாடசாலை காணி, ஒரு மாகாணசபை பாடசாலை அமைக்கப்பட வேண்டிய காணியாகும்.

இந்த அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி பாடசாலை அந்த மாகாணசபை பாடசாலைக்கு மாற்று கிடையாது. ஆகவே ஒளியமுல்லை பிரதேசத்தில் மாகாணசபை பாடசாலை தமிழ் பாடசாலை கட்டப்பட வேண்டும். அதை எவரும் கைவிட முடியாது. இதை வத்தளை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்வார்கள் என விரும்புகிறேன் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க