உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

இடி மின்னல், சூறைக் காற்றினால் சேதம் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இடி மின்னலில் சிக்கி மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி – பெரியவெட்டை எனும் பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
காங்கேயனோடை பிரதேசத்தில் அங்கு வீசிய சூறைக்காற்றினால் வீடுகள், மரங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டன.
கூரைகள் சூறைக்காற்றினால் கழற்றி வீசப்பட்டன. ஏராளமான மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சரிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் வீசிய சூறைக்காற்றினால் அங்கிருந்த சுமார் 50 இற்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகள் கழற்றி வீசப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை ஏராளமான பயன்தரும் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
அதிகாரிகளுக்கு சேத விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தங்கள் இடங்களுக்கு அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க