அடிப்படையே இல்லாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் விடயத்தில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றமற்றவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான விஷேட பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவசர வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.
இதனை முக்கிய வேண்டுகோளாக அரசியல் தலைமைகள் வலியுறுத்தி, அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அக்கட்சி திங்கட்கிழமை 10.06.2019 வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அரசியல் தலைமைகள் மீதான குற்றச்சாட்டுக்களைத் தெளிவுபடுத்துவதற்காக காட்டப்படும் அக்கறை போலவே அப்பாவிகள் விடயத்திலும் உடனடி அவதானமும், அக்கறையும் காட்டப்படுதல் வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சுமார் ஒன்றரை மாதம் கடந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பலரும் இதுவரை எதுவித முறையான விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் சாதாரணமாக குர்ஆன் பிரதிகளை வைத்திருந்ததற்காகவும், சமையலுக்கு பயன்படுத்தும் கத்திகளை வைத்திருந்ததற்காகவும், உலக வரைபடம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும், பௌத்த மதத்தை அவமதிக்கும் சின்னங்களையுடைய ஆடை அணிந்திருந்தார் என்பன போன்ற அற்பமான காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி இவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்களை உடனடி பிணையில் விடுவிக்க முடியாதவாறும், அவர்கள் தொடர்பான விடயங்களில் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் பிணை பெற முடியாதவாறும் பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் அவர்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் இவ்வாறான கைதுகளை எப்படிக் கையாள்வது? இது தொடர்பான முறைப்பாடுகளை யாரிடம் தெரிவிப்பது? இவர்கள் தரப்பு நியாயங்களை எப்படி நிரூபிப்பது? இவர்களை எப்படி விடுவிப்பது? எனத்தெரியாத நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் நாள்தோறும் நீதிமன்ற வளாகங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்குமாக அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க