இந்தியா

4000 கிமீ.. சிக்கிம் முதல் உத்தரகாண்ட் வரை.. எல்லையில் படைகளை குவித்த சீனா.. பரபரப்பு!

லடாக்: சீனா – இந்தியா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை நடந்து வரும் நிலையில் தற்போது சிக்கிம், அருணாசலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் எல்லையிலும் மிக தீவிரமாக போர் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.

இந்தியாவும் சீனாவும் தற்போது வரலாறு காணாத எல்லை பிரச்னையை சந்தித்து வருகிறது. லடாக் எல்லையில் இதுவரை இல்லாத அளவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் பாங்காங் திசோ பகுதியில் நிலவும் இந்த மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முயன்று வருகிறது.
இதற்காக இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரியும், சீனாவின் மேஜர் ஜெனரல் அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் லடாக்கில் கல்வான் எல்லை பகுதியில் இரண்டு நாட்டு படைகளை 2 கிமீ தூரம் அளவிற்கு பின்வாங்கியது.

இந்த நிலையில் சீனா – இந்தியா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை நடந்து வரும் நிலையில் தற்போது சிக்கிம், அருணாசலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் எல்லையிலும் மிக தீவிரமாக போர் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. லடாக்கில் லேசாக படைகளை சீனா விலக்கிக் கொண்டாலும், மற்ற இடங்களில் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. 4000 கிமீ தூரத்தில் பல இடங்களில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 4000 கிமீ தூரம் இருக்கும் எல்லை பகுதியில் முழுக்க முழுக்க சீனாவின் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சீனாவின் எல்லையில் இப்படி படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இமாச்சல எல்லையில் இருக்கும் நதி பகுதிகளில் சீன படகுகளை குவித்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் அருணாசலப்பிரதேசம் பகுதியில் புதிதாக 3000 படை வீரர்களை சீனா குவித்து இருக்கிறது. அங்கு தொடர்ந்து நவீன ரக ஆயுதங்களை சீனா குவித்து வருகிறது. அருணாசலப்பிரதேசம் பகுதியை சீனா தொடர்ந்து பல வருடங்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. தற்போது லடாக் எல்லை பிரச்னையை மையமாக வைத்து சீனா தொடர்ந்து அங்கு படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில்தான் இது அதிகமாகி உள்ளது. மே 10ம் தேதிக்கு பின்தான் இங்கே படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லடாக் மட்டுமே பிரச்சனை கிடையாது. சீனா உடன் நாம் எங்கு எல்லாம் எல்லையை பகிர்ந்து வருகிறோமோ அங்கு எல்லாம் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இந்தியாவும் இங்கு படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இந்தியாவின் 33 படை பிரிவு, 4வது படைப்பிரிவு , மலை பகுதிகளை பாதுகாக்கும் பல்வேறு Mountain Strike Corps படை பிரிவுகள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேச எல்லையில்தான் இந்தியா அதிக படைகளை குவித்து உள்ளது. இரண்டு இடங்களில் 5000க்கும் அதிகமான வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இடங்களில் சீனா ஏற்கனவே ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்தியாவை அச்சுறுத்த வேண்டும் என்றே உத்தரகாண்ட் அருகே கூட சீனா ரோந்து பணிகளை செய்து வருகிறது. லடாக் அருகே மட்டும் 10 ஆயிரம் வீரர்களை சீனா குவித்து இருக்கிறது. தற்போது மற்ற இடங்களிலும் வேகமாக சீனா வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கருத்து தெரிவிக்க