விளையாட்டு

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

கட்டாரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டதுடன், அவரது தங்கப் பதக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுநர் வீராங்கனைகளில் ஒருவரான 30 வயதுடைய கோமதி மாரிமுத்து 23ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 2.70 செக்கன்களில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தார். இருப்பினும், அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தது கடந்த வருடம் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து, மெய்வல்லுநர் ஒருமைப்பாடு பிரிவான ATHLETICS INTEGRITY UNIT கோமதி மாரிமுத்துவுக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி வரை கோமதி மாரிமுத்துவின் தடை அமுலில் இருக்கும். அதுவரை அவர் எந்தவொரு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க முடியாது.ஆகவே, குறித்த போட்டியில் 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது.

கருத்து தெரிவிக்க