வடக்கு செய்திகள்

அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுகின்றனர் -மாந்தை அந்தோனியார்புர மீனவர்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அந்தோனியார் புர மீனவர்கள், தாம் பாதிப்பிற்குள்ளான நிலையில் அதிகாரிகளினால் கண்டுகொள்ளப்படாதிருப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

கடும் வறட்சி மற்றும் வெப்பத்தினால் தொடர்ச்சியாக தமது மீன்பிடி தொழிலில் பின்னடைவை சந்திருப்பதாகவும் வாழ்வாதாரம் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் தமது பாதிப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அந்தோனியார் புரம் கிராம மக்கள் மீள் குடியேற்றத்தின் பின்னர் சுமார் 180 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு குறித்த கிராமத்தில் மீள் குடியேறினோம்.

வறுமையின் காரணமாக பெண்களும் ஆபத்தான கடல் அட்டை, நண்டு இறால் போன்றவை பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கடலுக்கு செல்லும் பிரதான படகு பாதையில் கடல் நீர் வற்றி காணப்படுகின்றது.

இதனால் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடலில் பிடிக்கும் மீன்களை கரைக்கு படகு மூலமாக கொண்டு வர முடியாமையினால் தொழிலில் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோமீற்றருக்கு மேல் தோலில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுகிறது.
எனவே விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க