நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்ரலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்தார்.
இவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்த சுழற்சிமுறையான உணவுத் தவிர்ப்பு போராட்டமும் தொடர்கிறது.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்துக்கு சென்றிருந்தார்.
அத்துடன், தேரரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ‘கண்டி சிங்கள வர்த்தக முன்னணி’ நகரின் சகல வர்த்தக நிலையங்களையும் மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மூட குறித்த முன்னணி அறிவித்தல் விடுத்துள்ளது.
மேலும், இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையான இரண்டு மணி நேரம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால், நேற்று மாலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க