இலங்கையில் இந்த வாரம், மாற்றங்கள் மிக்க முக்கிய வாரமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், இன்று வரை இலங்கையில் பதற்றநிலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தி, அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவிவிலகவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
கண்டியில் தலதா மாளிகைக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இந்த மூவரின் பதவிவிலகலை வலியுறுத்தி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக பல இடங்களிலும் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப்போராட்டத்தை நிறுத்தும் முயற்சி எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அத்துடன் அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து வெளியேறிய ஞானசார தேரரும் இன்று பகல் வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளார்.
அரசாங்கம் குறித்த மூவரையும் பதவிவிலக்காதுபோனால் பிக்குமார் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து இன்று கூடவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தீர்;க்கமான முடிவு ஒன்றை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை “ஊடகன்” இணையத்துக்கு தகவல் வழங்கிய கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்படும் என்று தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதியை தாம் சந்தித்தபோது “உங்களை பதவிவிலக கூறவும் மாட்டேன். பதவியில் இருந்து நீக்கவும் மாட்டேன். நீங்கள் விரும்பினால் பதவிவிலகலாம்” என்று அவர் கூறியதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதற்கிடையில் பௌத்த தேரர்களின் போராட்டங்கள் காரணமாக நாட்டில் இயல்பற்ற சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால், தாம் பதவிவிலகுவது பற்றி யோசிக்கலாம்.
எனினும் தம்மை பலாத்காரமாக பதவிநீக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே இன்று இடம்பெறவுள்ள முஸ்லிம் தலைவர்களின் கலந்துரையாடலில் புதிய திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க