சினிமா

படம் நடிக்க கணவர் தடை விதித்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்

‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் தன்னை நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதாக நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இதில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 2015ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த மழை வெள்ள சேதத்தை கருவாக கொண்ட படம், இது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்தன. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் பெருமழை வெள்ள காட்சிகளை படமாக்குவதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகில் ஒரு பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. ஒருநாளைக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீரை கிணறுகளில் இருந்து எடுத்து வந்து அரங்குக்குள் நிரப்பினோம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

படத்தில் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். “நடித்துக்கொண்டே இயக்குவது, ரொம்ப சிரமம். அதனால் நீ நடிக்க வேண்டாம். படத்தை இயக்கினால் மட்டும் போதும். நீ நடிப்பதாக இருந்தால், நான் படத்தை தயாரிக்க மாட்டேன்” என்று என் கணவர் நான் நடிப்பதற்கு தடை விதித்து விட்டார்.

அந்த தடையை நான் மீற விரும்பவில்லை. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

கருத்து தெரிவிக்க