உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆயுதப்போராட்டத்தை இனி தமிழர்கள் ஆதரிக்கமாட்டார்கள் – மங்கள

“ ஆரம்பகாலகட்டத்தில் தமிழ் மக்கள் தனிஈழம் கோரவில்லை. தமக்கான உரிமைகளையே அவர்கள் வலியுறுத்தினர். பண்டா, செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் இலங்கையில் உள்நாட்டுப்போர் இடம்பெற்றிருக்காது.

பிக்குகள் சிலர் போர்க்கொடி  தூக்கியதாலேயே உடன்படிக்கையை கிழித்தெறியவேண்டிய நிலை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது. இதன் விளைவு பாரதூரமாக அமையும் என பண்டாரநாயக்க அன்றே எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறியதுபோலவே உள்நாட்டுப்போர் மூண்டது.

நகத்தால் கிள்ளியெறிந்து தீர்த்துவைக்கக்கூடிய பிரச்சினையை, அடிப்படைவாதிகளே போர்க்களத்தை நோக்கி நகர்த்தினர். இதனால் 30 ஆண்டுகள் இன்னல்களை அனுபவித்தோம். இன்றும் அடிப்படைவாதிகள் சிலர் நாட்டைக் குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.  இதனால் ஆசியாவின் சுவர்க்க பூமியாக இருக்கவேண்டிய இலங்கை வேறொரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இன்று மட்டுமல்ல என்றுமே தமிழ் மக்களை நேசிப்பவன் நான். இதனால்தான் புலிகள் அமைப்பிலிருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு முற்பட்டேன். எனவே, விடுதலைப்புலிகள் என்மீது கடும் அதிருப்தியிலேயே இருந்தனர். எனினும், நான் அடிபணியவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ச்சியாக விமர்சித்தேன்.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பாட்டிலிருந்த காலப்பகுதியில் அவர்கள் தொடர்பில் ஒரு வார்த்தையையேனும் வெளியாடாத மஹிந்தவும், அவரின் சகாக்களும் இன்று தம்மை தேசப்பற்றாளர்களாக காண்பித்துக்கொண்டு சூளுரைத்துவருகின்றனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கும் என்றெல்லாம் அறிவிப்புகளை விடுத்து  வருகின்றனர். ஆனால், வடக்கு, கிழக்கு மக்கள்,விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சிபெறுவதை விரும்பவில்லை. மீண்டுமொரு போருக்கு அவர்கள் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பது உறுதி.’’  என்றார் மங்கள சமரவீர.

கருத்து தெரிவிக்க