சினிமா

இளையராஜாவின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில்!

தன்னுடைய பழைய பாடல்களை தற்போதைய படங்களில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடும் இளையராஜாவுக்கு நடிகை கஸ்தூரி மற்றும் இயக்குநர் சீனுராமசாமி ஆகியோர் பதில் வழங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து திரைக்கு வந்த 96 படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதற்கு “இப்போதைய படங்களில் எனது பாடல்களை பயன்படுத்துவது தவறு. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுகிறது” என இளையராஜா வெளியிட்ட எதிர்ப்பு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சீனுராமசாமி, இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

“1980, 1990 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவரது பாடல்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 96 படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி கூறும்போது, “இளையராஜா இசையால் மட்டும் உரையாட வேண்டும். மடியும் எண்ணத்தில் இருந்த என் மனதை இசையால் மாற்றி, மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா, கடவுளை கேள்வி கேட்க வேண்டாமே” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க