உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

“ரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளோம்”

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எங்களுடைய கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவினை நீண்ட கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகும் விவாதங்களுக்குப் பிறகும் எங்களுடைய தலைமைக்குழு எடுத்து இருக்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் இழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற தலைமைக்குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எஸ் தீவிரவாத அடிப்படை இயக்கத்தின் தாக்குதல்களின் விளைவாக ஒட்டுமொத்த இலங்கை நாடும் ஒரு அசாதாரணமான சூழ்நிலைகுள்ளாக்கி தொடர்ந்து சிக்கி கொண்டு இருக்கின்ற நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவர் மீது அவநம்பிக்கையை தெரிவித்து பாராளுமன்றத்திலேயே பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலே தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக இன்றைய தினம் எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் முகமாக தலைமைக்குழு வவுனியாவில் நாடாத்திய கூட்டத்திலே விரிவாக விவாதித்து முடிவு ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது.

ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல்களிலேயே கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட பெறுமதிமிக்க உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இவர்களிலே பலர் படுகாயங்களுக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பின்னணியிலேயே தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளும்இ விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையிலே இந்த நாட்டின் அரசாங்கத்திலே அமைச்சராக இருக்கின்ற ஒருவர் மீது இந்த விவகாரத்தினை அடிப்படையாக வைத்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

பாரதூரமான குற்றப் புகார்கள் ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேரடியாகவோஇ மறைமுகமாகவோ அல்லது அந்த தாக்குதல்களோடு ஏதாவது ஒரு விதத்திலே சம்பந்தப்பட்டிருக்கின்ற நபர்களோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகள் இருந்தன என்ற அடிப்படையிலேயே இந்த பாரதூரமான புகார்கள் நாடு தழுவிய அளவிலேயே கடந்த சில வாரங்களாக இந்த தாக்குதல்களை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரையிலே அமைச்சர் இந்தக் குற்றஹப் புகார்கள் தொடர்பிலே எந்த விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. நீதியான பாரபட்சமற்ற விசாரணை ஒன்றுக்கு இந்த குற்றபுகார்கள் தொடர்பிலே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முகம் கொடுத்தாக வேண்டும் என்பதிலேயே எங்களுடைய கட்சி இந்த நாட்டின் மக்களை போலவே உறுதியாக இருக்கின்றது. இதில் எந்த ஒரு சமரசத்துக்கு விட்டுக்கொடுப்புக்கும் இடம் கொடுக்க மாட்டாது.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை நாங்கள் அணுகி இருக்கின்றோம்.

ஆனால் அமைச்சர் பதவியிலே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையிலேயே ஒரு நீதியான பாரபட்சமற்ற ஒரு விசாரணையை இந்த விவகாரத்திலே நடாத்த முடியும் என்று நாம் நினைக்கவில்லை என்றார்.

கருத்து தெரிவிக்க