நுவரெலிய, கந்தப்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கந்தப்பளை எஸ்டேட் எனப்படும் தேயிலை மலைத் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் இன்று மாலை சுமார் 150 மதுபானப் போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும் பொதுமகன் ஒருவர், சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கந்தப்பளை எஸ்டேட் எனப்படும் தேயிலை மலைத் தோட்டத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கூறி சுமார் 200 பொதுமக்கள் கையொப்பமிட்டு கந்தப்பளை காவல்துறையினருக்கு மனு ஒன்றை ஏற்கனவே கையளித்திருந்தனர்.
அதில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யுமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.
கடந்த வாரம் இந்த சட்டவிரோத மதுபான விற்பனை இடத்தை சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையிட்டதையும் பொதுமக்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இன்று தேயிலை மலைத்தோட்டத்தில் மதுபான போத்தல்களை கைப்பற்றியதாக கந்தப்பளை காவல்துறையினர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பு ஏனைய பெருந்தோட்டங்களில் இருந்தும் கிடைத்தால், தாம் சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்கமுடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க