இன்றைய நவீன யுகத்தில் ஆராச்சிகளின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்ற பலவித மருத்துவ விடயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கூறிவிட்டனர்.
நோய் வரும் காரணிகளை தெளிவாக அறிந்து அவற்றை நீக்கி உடலைப் பாதுகாத்துக்கொள்பவர்களே இன்று உலகை ஆட்டிப்படைக்கும் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்பவர்களாக இருக்கின்றனர்.
“ நோயில்லா பெருவாழ்வு” என்பது மிகவும் உன்னதமான நிலையாகும்.
இந்தநிலையை அடைய விரும்புகிறர்கள் கடைப்பிடிக்க வாழ்வியல் முறைகள் ஏராளமாக இருக்கின்றன.
நம் உடல், நலத்துடன் இயங்குகிறது. இதே உடல் நலம் எப்போதும் தொடர்ச்சியாக இருக்கும் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
இந்த எண்ணம் மிகவும் உயர்ந்தது. இதனை அடைவதற்கு தேவையான வழிமுறைகளை சித்த மருத்துவம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது.
இன்றைய யுகத்தில் உடலுக்கு நல்லது என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் உணவுகள், செயற்பாடுகள் தொடர்ச்சியாக எமது உடலில் மாற்றத்தை ஏற்படு;த்தி அதன் மூலம் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
இது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்பது குறள்.
இந்தக்குறள் மூலம் திருவள்ளுவர் வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்ற மூன்றுவகையான காப்பு முறைகளை விளக்கியுள்ளார்.
இதில் நோய்க்கான காரணங்கள் எவை என்பதை தெளிவாகப் புரிந்து அவற்றில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதே நோயில்லாத நல்வாழ்வு ஆகும்.
இலங்கையில் ஏற்படும் மரணங்களி;ல் மூன்றில் இரண்டு பங்கு தொற்றா நோய்கள் மூலமே ஏற்படுகின்றன.
தொற்றா நோய்கள் எனும்போது அவை ஒருவர் மூலமாக ஒருவருக்கு தொற்றாது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மூலம் இந்த நோய்கள் ஏற்படுகின்றன.
அது மட்டுமல்லாது, நீண்டகால பின்விளைவுகளையும் இவை ஏற்படுத்துகின்றன.
இருதயநோய்கள், புற்றுநோய், பாரிஷ நோய், நீரிழிவு, உயர்குருதி அழுத்தம், நீடித்தக் காலமாக உள்ள சுவாசநோய்கள் போன்றவை தோற்றா நோய்களான உள்ளன.
இந்த தொற்றாநோய்கள், வாழ்க்கை முறை
தடுமாற்றத்தாலும், முறையற்ற, கட்டுப்பாடற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையாலும், தீய உடலுக்கு கேடு விளைவிக்கும் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் ஏற்படுவதாக சித்தமருத்துவம் கூறுகிறது.
பல நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு நிலையையும் நோய்களுக்கு எதிரான ஆற்றலையும் உடல்தான் தோற்றுவிக்கிறது.
தரமான உணவுகளும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகளும் நோய்களுக்கு எதிரான உடல் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக உள்ளன.
சித்தர்கள், “பிணி அனுகா விதி” என்ற கூற்றுமூலம் நாள்தோறும் காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச்செல்லும் வரையில் செய்யும் கடமைகள், கால ஒழுக்கம் அதாவது பருவமாற்றங்களுக்கு ஏற்ற பழக்கவழங்கங்களை அமைத்துக்கொள்ளுதல் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் நோயற்ற வாழ்வை மேம்படுத்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
சட்டமுனி என்ற சித்தரின் பாடலில்,
“அண்டத்திலுள்ளதே பிண்டத்தில்
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே” என்று குறிப்பிடுகிறார்.
பூமி, பிறகோள்கள், சூரியன், நட்சத்திர மண்டலம் அனைத்தையும் உள்ளடக்கியதே அண்டம் எனப்படுகிறது.
உடம்பை பிண்டம் என்றுக்கூறும் சித்தர், உடம்பை சுற்றியுள்ள அனைத்துப்பொருட்களும் இருக்கும் அடிப்படைப் பொருட்கள்தான், உடம்பிலும் உள்ளன என்று விளக்கியுள்ளார்.
இந்த அடிப்படைப் பொருட்களான, பஞ்ச பூதங்கள் என்ற நிலம்,நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என்பன மிக நுட்பமாக உலகில் உள்ள பொருட்களிலும் உடலில் உள்ள உறுப்புக்களிலும் கலந்துள்ளன.
இந்த ஐம்பூதங்களும் அதனதன் அளவில், கூடியோ குறைந்தோ காணப்பட்டால், அது நோயாக உருவாகும்.
இந்த ஏற்ற இறக்கங்களை உலகில் உள்ள பொருட்களைக் கொண்டு சீராக்குவதே சித்த மருத்துவமாகும்.
இதற்கு உடலைப் பற்றிய முழு அறிவும், உலகப்பொருட்களை பற்றிய முழு அறிவும் அவசியம்.
இந்த அறிவுகளை முழுமையாக பெற்ற ஞானிகளாக சித்தர்கள் விளங்கினர்.
ஆரோக்கியத்தில் உணவு உறக்கம் பிரமச்சாரியம் ஆகியன முக்கிய பங்கை வகிக்கின்றன.
சித்த மருத்துவத்தில் முக்கிய இடத்தை பெற்ற “உணவே மருந்தே மருந்தே உணவு” என்ற கோட்பாடு, இன்று நவீன யுகத்தில் உண்வைப்பற்றிய சிந்தனையை தூண்டியுள்ளது.
இது உணவுப்பழக்கவழங்கங்களில் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.
சித்த மருத்துவத்தின் முக்கிய நோக்கம்,உடலை நோயில்லாமல், ஆரோக்கியமாக பாதுகாப்பதும், நீண்டக்கால இளமையை பேணுவதும் ஆகும்.
விஞ்ஞானம் வளர்ச்சியடையும் முன்னரே சித்த்ர்களால் “காயகல்பம்” என்ற அரிய பொக்கிஷம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இ;ந்த காயக்கல்பம் மூலம் பிணி அண்டாத பெரு வாழ்வு சாத்தியமாகும்.
“காயம்” என்றால் உடல் “கல்பம்” என்றால், மாற்றம் என்ற பொருள்படும்.
காயகல்பத்தை செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்;பு சக்தியை அதிகரித்துக்கொள்ளமுடியும்.
அத்துடன் உடலுக்கு புத்துணர்வை அளித்து நோயிலிருந்து விடுபடவும் முடியும்.
இந்தக்காயகல்ப சிகிச்சை, மூன்று முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
மூலிகை கல்பம்
நெல்லி, துளசி, கற்றாழை. வேம்பு, கரிசலாங்கண்ணி, நொச்சி போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் இதற்குள் அடங்கும்.
தாது- சீவகல்பம்
தாதுக்கள், உலோகங்கள், மிருகங்களில் இருந்து பெறப்படும் பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும்.
யோகக்கல்பம்
யோகாசனம், பிராணாயாமம், இயமம், நியமம், போன்றவை இதில் உள்ளடங்கும்.
திருமந்திரத்தை அருளிய திருமூலர், யோகாசன பயிற்சியும் மூச்சுப்பயிற்சியும் தினந்தோறும் தவறாமல் செய்து வருவது மூப்பிலா வாழ்க்கைக்கான வழி என்றுக்கூறுகிறார்
இந்தநிலையில் ஆரோக்கியமும் உணவும் என்ற தலைப்பை பார்க்கும்போது “உணவே மருந்து மருந்தே உணவு” என்கிறது சித்தமருத்துவம்.
எனவேதான் பெரும்பாலான சித்த மருந்துகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
“உண் பதிரு பொழு தொழிய மூன்று பொழுதுண்ணோம்” என்பதற்கு அமைய ஒரு நாளைக்கு இரண்டு முறையே உண்வை உட்கொள்ளவேண்டும்.
இதன்போதே உணவு செரிமானம் அடைய தேவையான இடைவெளி கிடைக்கிறது
மலம், நீர் கழியவும் ஏதுவாக இருக்கும்.
திருமூலர் 8000 என்ற நூலில்
“மறுப்பது உடல் நோய் மருந்தெனவாகும்
மறுப்பதுன நோய் மருந்தெனச் சாலும்
மறுப்பதினி நோய் வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே” என்ற சொல்லப்படுகிறது
உடல் ஆரோக்கியத்தை பேண விரும்பும், எவரும் முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் நீடூழி வாழலாம்.
உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்டால், மருந்தென்பது உடலுக்கு தேவையில்லை
அத்துடன் திருமூலர், உடல் காத்தலின் தேவையையும் பாடல் மூலம் விளக்குகிறார்.
“உடம்பார் அழிவின் உயிரார்
ஆழிவர் திடம்பட
மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை
வளர்க்கும்
உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்
உயிர்
வளர்த்தேனே”
உணவாக பயன்படும் ஒரு பொருளை குறைந்தளவில் பக்குவமாக உண்ணும்போது அது மருந்தாக மாறுகிறது.
அதேப் பொருளை அதிகமாக உண்ணும்போது அது பாதிப்பை தருகிறது.
ஒரு உணவுப் பொருளின் உள்ளே “சத்துவகுணம்” என்ற மருந்துவத் தன்மையும் ரஜோ குணம் என்ற உணவுத்தன்மையும் தாமசக் குணம் என்ற நச்சுத் தன்மைகள் உள்ளன.
மருத்துவக் குண உணவு என்பது ஒரு நோயைக் குணமாக்குவதுடன் மீண்டும் அது வராதிருக்கவும் உதவும்.
எனினும் இன்று உணவுகள்,அலங்காரத்தையும் ஆடம்பரத்தையும் பிரதிபலிக்கின்றன.
நாம் உண்ணும் உணவு, பசிக்காக மட்டுமல்லாமல், ஆரோக்கிய உடலைப் பேணுவதற்கும் உதவவேண்டும்.
எனவே அது கலப்படமில்லாத, இரசாயன, களை நாசிளிகள் பயன்படுத்தப்படாத, இயற்கையான முறையில் பெறப்படுதல் அவசியம்.
உணவுகள் கலாசாரத்தையும் காலநிலைக்கு ஏற்ற்தாகவும அமையவேண்டும்.
இவ்வாறான உணவுகளே நமது சிந்தனையையும் செயலையும் சீர்படுத்த உதவும்.
இன்றைய நவீன யுகத்தில் “பசித்துப் புசி” என்ற முதுமொழி தகர்க்கப்பட்டு நேரம் தவறி உண்ணப் பழகிவிட்டோம்.
அலங்காரமாக கடைகளில் விற்கப்படும் “பாஸ்ட்புட்” எ;ன்ற சொல்லப்படுகின்ற உணவுகளை வாங்கிக்கொடுத்து, எமது வருங்கால சந்ததியை பாதாளத்துக்கு கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறோம்.
இதனை கைவிட்டு தமது முன்னோர்களின் சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.
கம்புத்தோசை, தினைமா, வரகு, கேப்பைக்களி, சாமை, சோளம், தினை, கம்பு, போன்ற சிறுதானியங்கள் சேர்ந்த உணவுகள், உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன.
கொழுப்புச்சத்தை குறைத்து உடல் பருமனை தடுக்கின்றன.
ஊட்டச்சத்து மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதில் ஜீரணமாகிறது.
எனினும் சிறுதானியத்தை பயன்படுத்தும் பழக்கம் இன்று இல்லாமல் போய்விட்டது.
அரிசியே துணை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
அதனையும் அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக தவிடை நீக்கி வெறும் சக்கையையே உண்கிறோம்.
நமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல், மூதாதையர்களின் உணவு வகைகளை மீண்டும் நவீன உலகுக்கு கொண்டு வரவேண்டும்.
இதன்மூலமே வருங்கால சந்ததியினரின் உடல், உள்ளம் இரண்டையும் ஆரோக்கியமாக்க முடியும்.
சித்த மருத்துவத்தில், உணவு என்பதே அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
இயற்கை உணவும், இயற்கையுடன் இணைந்த பழக்கவழங்கங்களும் உடல் நலத்தையும் உள நலத்தையும் பேணுகின்றன.
சத்துக்காக இல்லாமல், சுவைக்காக உண்ணும ஒவ்வொரு நாட்டை பிரதிபலிக்கும் நவீன உணவகங்கள், இன்று பல்கிப்பெருகிவிட்டன.
ஆழகான வண்ணப்; பெட்டிகளிலும் பைகளிலும் பதப்படுத்திய ஆயத்த உணவுகள் மற்றும் விரைவு உணவுவகைகள் இன்று சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன.
இதன் காரணமாக தொற்றும் தொற்றா நோய்கள் பெருகிவருகின்றன.
“உணவே மருந்து” என்ற உன்னதமான நிலை மாறி “மருந்தே உணவு” என்ற நிலை ஏற்பட்டுள்ளது
திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உணவின் பெருமையையும், அது எவ்வாறு மருந்தாக மாறுகிறது என்பதையும் திருவள்ளுவர் திட்மாக எடுத்துரைக்கிறார்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது
அ;ற்றது போற்றி உனின்”
இந்த வள்ளுவரின் வாக்கின்படி, உடல் நலத்துக்கு உகந்த உணவு எது?
ஆகாத உணவு எது? என்;று பகுத்தறிந்துக்கொண்டால், நோய்கள் எம்மை விட்டு ஓடி விடும். என்று கூறியுள்ளார்.
வுழமையாக எமது சமையலில் பயன்படுத்தும் பொருட்களை எடுத்துக்கொண்டால், அதில் ஒவ்வொனறிலும் ஒவ்வொரு நோய்த் தீர்க்கும் தன்மைகள் மிகுந்துள்ளன.
மஞ்சள்- நெஞ்சிலுள்ள சளியை போக்கி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூண்டு- வாயுயை அகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கி பசியைத் தூண்டும்.
சீரகம்- வயிற்றுச் சூட்டை தணிக்கும்
வெங்காயம்- குளிர்ச்சியை உண்டாக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும்.
பூண்டு, சீரகம், மிளகு, என்பவை, சூட்டை தணித்து ஜீரண சக்தியை அதிகரிக்கின்றன.
எளிதில், ஜீரணிக்கக்கூடிய பழம் காய், பருப்பு, அரிசி என்பவற்றை எமது குடல இலகுவதாக ஏற்றுக்கொள்கிறது.
எமது நாக்குக்கு முன்னுரிமை வழங்காது எமது உடல் நலத்துக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்தது.
அமிழ்தினி சுப்பிரமணியம்
மருத்துவ அதிகாரி-ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை
(பொரல்லை)
கருத்து தெரிவிக்க