10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
21/4 தாக்குதலையடுத்து நாட்டில் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில், அக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் மற்றும் திருகோணமலை தென்கைலை ஆதீனத்தை சேர்ந்த குருக்கள் அகத்தியர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில்,
“முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலை இந்தவருடம் பெருந்திரளான மக்களை திரட்டி 10ஆவது ஆண்டில் நீதியைக் கோரி உணர்வுபூர்வமாக நினைவேந்தலைச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குல்களால் அந்த முயற்சி தடைபட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த வருடமும் சிறப்பான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ஆம் திகதியன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்த நினைவேந்தலை மேற்கொள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன.
உணர்வுபூர்வமாக அமைதியான முறையில் இந்த வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். அத்தோடு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம். ” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க