வடமேல் மாகாணத்திலும், கம்பஹாவிலும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட குழு அமைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் வடமேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.
குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.
இவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் இனவாத கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.
கருத்து தெரிவிக்க