புலிகள்மீதான தடை நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை, இந்தியா மேலும் 5 வருடங்களுக்கு நீடித்துள்ளது.
2014ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கான அறிவித்தலை புதுப்பித்து இந்திய உள்விவகார அமைச்சினால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய பிரஜைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதால் உடன் அமுலாகும் வகையில் இந்த இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
164.1 மில்லியன் டெலர் நிதியுதவி
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கைக்கு இந்த வங்கி வழங்கவுள்ள 5ஆவது கட்ட கடன் தொகையாக இந்த தொகை வழங்கப்படுவதாக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.
வானிலை அறிவிப்பு
மேல், மத்திய , சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது..
ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஹக்கீம், ரிஷாட் கூட்டாக கோரிக்கை
குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களைச் சுட்டு வீழ்த்த படையினருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர்.
நேற்று மாலை அலரி மாளிகைக்குச் சென்ற அமைச்சர்கள், “குருநாகலில் அப்பாவி முஸ்லிம்கள் வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டுள்ளனர். அதனை முப்படையினரும் வேடிக்கை பார்த்துள்ளனர். எனவே, வன்முறையில் ஈடுபடுபவர்களைச் சுட்டு வீழ்த்த உடன் உத்தரவிடுங்கள்” என்று பிரதமரிடம் காட்டமாகத் தெரிவித்தனர்.
இதற்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், “உடனடியாக உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.
மஹிந்தவின் விசேட அறிக்கை
எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், ன் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,
“1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள் தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது. அந்த அனுபவங்களை நாங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பொறுமையாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். மிகவும் கடினமானது என்ற போதும், உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த தீவிரவாதத்தையும், இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு விடுமுறை
வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க