நுவரெலிய.கந்தப்பளை போட்ஸ்வுட் தோட்டக் கீழ்பிரிவின் சுமார் 300 குடும்பங்களுக்காக, 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குடிநீர் திட்டம் தற்போது பயனற்றுபோயுள்ளதாக பொதுமக்கள் ஊடகனிடம் முறையிட்டுள்ளனர்.
“கமநெகும” திட்டத்தின் கீழ் 32 லட்சம் ரூபா ஒதுக்கீட்டில் இதன் மூலம் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
எனினும் தற்போது இந்த குடிநீர் பாவனைக்கு உதவாத நிலையை அடைந்துள்ளது.
தேயிலை மலைப்பகுதி ஒன்றில் இருந்து பெறப்படும் இந்த நீர் சுத்திகரிக்கப்படாமையே இதற்கான காரணமாகும்.
அண்மையில் இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் கலாநிதி கே.ஆர் கிருஸாந்த், குறித்த தோட்டத்துக்கு சென்று உண்மைகளை கண்டறிந்தார்.
இதன்மூலம், நோய்கள் ஏற்படக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் கிணறுகள் சுத்திகரிக்கப்படவேண்டும் என்பதே சுகாதார முறையாகும்.
எனினும் இந்த குடிநீர் திட்டம் கடந்த சில வருடங்களாக சுத்திகரிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பி;;ல் போட்ஸ்வுட் கீழ்ப்பிரிவு கிராமிய திட்டத்தின் தலைவராக இருக்கும் வீரமுத்து சுப்பிரமணியத்தை “ஊடகன்” இணையம் தொடர்புகொண்டு வினவியது.
இதன்போது பதிலளித்த அவர். சுமார் 312 குடும்பங்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
குடிநீர் கிணறு அமைந்துள்ள பகுதியில்; கால்நடைகள்; மேச்சலுக்கு விடப்படுகின்றமையால், குடிநீர் அசுத்தமாகியுள்ளது.
காலநிலை சீர்கேடு காரணமாக அந்த கிணற்றை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும் தமது அமைப்பு கலந்துரையாடலை நடத்தி தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் எதிர்வரும் திங்கட்கிழமையன்று புதிய கிணறு ஒன்றை பாதுகாப்பான முறையில் அமைக்க முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த கிணறு மூலம் சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீரமுத்து சுப்பிரமணியம் ஊடகனிடம் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க