இந்தியா

மேற்கு வங்கத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு – மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்கள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் மே 31வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 நாட்களில் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க கோயில்களில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இதேபோல் தான் மசூதி மற்றும் தேவாலயங்களில் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் 4ம் கட்ட லாக்டவுன் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் ஜூன் 1 முதல் கோயில் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜூ 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடகாவிலும் ஜூ 1ம் தேதி முதல் கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்து இருந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜூன் 1 முதல் தங்கள் மாநிலத்தில் கோயில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

கருத்து தெரிவிக்க