2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சாலை மார்க்கமாக மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபரை பிரதமர் மோடி, கைகுலுக்கி வரவேற்றார். சீன அதிபரை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி – சட்டையுடன் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்களை இருதலைவர்களும் ரசித்தனர்.
பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்தனர். பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசித்தனர்.
கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களித்தனர்.
கருத்து தெரிவிக்க