வெளிநாட்டு செய்திகள்

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை முழுமையாக நிறுத்தவில்லை- இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.

நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

நிலவில் 14 நாட்கள் பகலாகவும் 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். அதன்படி,கடந்த 21ஆம் தேதி முதல் நிலவின் தென் துருவ பகுதியில் இரவு தொடங்கியது.

எனவே, இரவு நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் தென் துருவ பகுதியில் இரவு நேரத்தில் நிலவும் கடுமையான குளிர் போன்ற காரணங்களால் விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்வது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், தற்போது நிலவின் தென் துருவ பகுதியில் இரவு இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்றும் மீண்டும் அந்தப் பகுதியில் பகல் வந்தவுடன் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராய தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க