உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழர்களிடம் ஒற்றுமை நன்றியுணர்வும் இல்லாமல் போய்விட்டது – சி. சிவமோகன்

தமிழர்களிடம் ஒற்றுமை நன்றியுணர்வும் இல்லாமல் போய்விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.
ஓமந்தை மத்திய கல்லூரியில் கற்றல் வள நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்..,
இன்று தமிழர்களிடையே இல்லாமல் இருப்பது  ஒற்றுமைதான்.  இந்த மாணவர்களுக்கு இந்த ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியது அடுத்த பாடம் நன்றியுடன் நடத்தல்.
அதாவது ஒருவருக்கு ஒரு நண்பன் அல்லது ஒரு நண்பி உதவி செய்தால் அதற்கு நன்றியுடன் என்றும் இருக்க வேண்டும். இன்று எமது சமுதாயத்தில் இல்லாமல் போனது அந்த நன்றியுள்ளமையும் தான்.
மூன்றாவதாக  உண்மைகளை பேசுவது இந்த மாணவர்களுடைய வளர்க்க வேண்டிய பழக்கவழக்கம். இன்று எமது சமுதாயத்தில்  பொய்களை பேசுவது பொய்களை ஏற்றுக்கொள்வது, உண்மைகளை ஒதுக்கிவிடுவது என்பது ஜதார்த்தமாகிவிட்டது .
செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலில் ஒரு பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்திருக்கிறார்கள்.
எமது சைவ சமய அனுஷ்டானங்களின்படி ஒரு கோயிலுக்கு அண்மையில் ஒரு உடல் இருந்தாலே கோவில் நிகழ்வுகளை நாங்கள் ரத்து செய்வது வழமை.
அப்படி இருக்கும் பொழுது ஒரு நீதிமன்ற உத்தரவை வழங்கப்பட்ட பின் அந்த உடலை அங்கு தகனம் செய்ய முயற்சி செய்யப்பட்ட போது நீதிமன்றத்தில் இவ்விடயம் எடுத்துச்செல்லப்பட்டு இடைக்கால தடை உத்தரவு எடுக்கப்பட்டு மீண்டும் விசாரணைகளின் பின் அந்த உடலை கோவிலிலிருந்து ஒதுக்குப்புறமாக இருக்கும் கடற்கரையில்  தகனம் செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டது.
அதையும் மீறி ஞானசார தேரர் தங்களுடைய கூட்டங்களுடன் சென்று திடீரென அந்த உடலை எடுத்துச்சென்று அதே கோயில் வளாகத்தில் தகனம் செய்திருக்கின்றார்.
இவ்விடயம் நீதிமன்ற அவமதிப்பிற்கு உட்பட்டிருக்கின்றது. நீதிமன்றம் சவாலுக்கு உட்படுத்த படுத்தப்பட்டிருக்கிறது. பொலிஸார் அதற்கு துணை போயிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் தண்டனை பெற்றவர். அவர் மீண்டும் இந்த நிலையை உருவாக்குவதற்கு எமது ஜனாதிபதி தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரை மன்னிப்பு அடிப்படையில் வெளியே விட்டிருந்தார்.
மீண்டும் அவர் அதே அவமதிப்பையே செய்திருக்கின்றார்.  இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகின்றது. இவரை வெளியே விட்ட  ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைவேற்று  அதிகார ஒழிப்பு இது காலத்திற்கு காலம்  எடுக்கப்படும் ஒரு ஆயுதம்.  ஆனால் இன்றும் அதை ஒழிப்பதற்கான எண்ணங்கள் இல்லை என்றுதான் சொல்லலாம்.
ஒவ்வொருவரும் தாங்கள் அந்த தேர்தலை வெற்றி கொள்வதற்காக இந்த விடயத்தை முன்னெடுக்கிறார்கள்  நிறைவேற்று அதிகாரம் என்பது என்றைக்கும் பொருத்தமற்றது தான்.
இந்த மக்களைப் பொறுத்தவரை அதில் ஒரு தனி மனிதனின் எண்ணகருவிற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கலைப்பு முயற்சி கூட ஒரு தனிநபர் இரவில் தான் எடுத்துக்கொண்ட தன்னிச்சையான முடிவாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியும்.
எனவே அவ்விடத்தில் நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று இருந்தாலும் இந்த விடயத்தில் எந்தவொரு  அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவார்கள் என்பதை எதிர் பார்க்க முடியாது என  தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க